சம்பள அதிகரிப்பு கோரி அரச ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று பிற்பகல் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
20000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி அரச ஊழியர்கள் இன்று முதல் பல்வேறு தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், அது எவ்வளவு என்பதை அமைச்சரவை இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு இன்று (30) வருகிறது.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில் முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டனவா என பரிசீலிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கைக்கு ஏற்கெனவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அதனைத் திருத்தியமைக்க வேண்டும் என பிரதான நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அச்சட்டமூலங்களின் உள்ளடக்கத்திற்கு கடுமையான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் பின்லாந்து, போலந்து, ஜேர்மனி மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றக் குழுவினர் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.
சுமார் ஒருவார காலம் நாட்டில் தங்கியிருப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் அவர்கள், அக்காலப்பகுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
2020 ஜூன் மாதம் இறக்குமதி தடை விதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 6969 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் 3809 மோட்டார் கார்கள் மற்றும் உதிரி வாகனங்கள், 2971 லொறிகள், பாரவூர்திகள், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், அம்புலன்ஸ் உள்ளிட்ட 189 சிறப்பு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அதாவது 4348 வாகனங்கள் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது இறக்குமதி செய்யப்பட்டன.
அந்த ஆண்டில் 2,409 மோட்டார் கார்கள் மற்றும் பிற வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த வாகனங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டவை என சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்பில் சுங்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சம்பந்தப்பட்ட பொருட்களின் பெறுமதியில் மூன்றில் ஒரு பங்கு தொகை வழங்கப்படும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதியின் காரணமாக 2018 ஆம் ஆண்டில் சுங்கத்துறைக்கு 187 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைத்துள்ளதாகவும், இது அந்த வருடத்தில் சுங்கத்தின் மொத்த வருமானத்தில் 23 வீதமாகும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, இந்த வருடம் சுங்கத்தின் மொத்த வருமானத்தில் 1.5 வீதம் வாகன வரியாக ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காக ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொள்ள பாடுபடுவேன் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில், தான் நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன் எனவும், தன்னை யாராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு மதத் தலைவர்கள் மற்றும் செல்வாக்கு குழுக்களின் ஆசீர்வாதம் ஏற்கனவே கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்க கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்கெடுப்பின் பின்னர் நீக்கப்பட்டார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் அரசாங்க அமைச்சர்களுக்கும் அவருக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
அடுத்த வருடத்திற்கான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் விவாதத்தின் போது அல்லது வரவு செலவுத் திட்டத்தின் போது ஏதேனும் அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பொஹொட்டுவையில் உள்ள சில குழுக்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை விமர்சித்து வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம் என கூறி எப்படியாவது அமைச்சர் பட்டம் பெற்றுக்கொள்ள ஜனாதிபதியை அடிப்பணிய வைக்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டார் என அவருக்கு விசுவாசமானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தை இரண்டாம் வாசிப்பில் தோற்கடிக்காமல், வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்துடன் தொடர்புடைய எம்.பி.க்கள் குழுவொன்று வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டால் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் மொட்டு தற்போதுள்ள பெரும்பான்மை பலத்தை இழக்க நேரிடலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இருபதாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளை உடனடியாக தீர்க்கக் கோரி நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகவுள்ளதாக தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 20,000 ரூபா சம்பளத்தை அதிகரிக்கக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த அரச ஊழியர்களும் நாளை மறுநாள் வீதியில் இறங்குவதற்கு தயாராக உள்ளதோடு, தனியார் துறை, அரை அரச துறை ஊழியர்களும் இதேபோன்ற தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சு மாற்றத்திற்கு எதிராகப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் கருத்துக்களுக்கு புதிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா பதிலளித்த பின்னர், பொஹொட்டுவேயைச் சேர்ந்த பல அமைச்சர்கள் நாமல் ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு லான்சாவின் கருத்துக்கு ஏன் பதிலளிக்கவில்லை என வினவியுள்ளனர்.
லான்சாவின் கூற்றுக்கு ஊடகங்கள் மத்தியில் பெரும் விளம்பரம் கொடுக்கப்பட்டதன் காரணமாக சில அமைச்சர்கள் நாமலின் வீட்டிற்குச் சென்று நாமலைச் சந்தித்து இது குறித்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு அவர்கள் அனைவரும் எதிர்பார்க்காத பதிலை நாமல் வழங்கினார்.
“அவ்வளவு யோசிக்க வேண்டாம்..லான்சா கொஞ்ச காலம் எங்கள் குடும்பத்துக்காக இருந்தவர்..தேர்தலில் எங்களுக்கு உதவி செய்தார்..அவருக்கும் ஒரு பிரச்சனை வந்தது. அப்போது மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு சென்று அவர் பக்கம் நின்றார். அதனால் பதில் சொல்லத் தேவையில்லை. நான் அந்த அளவிற்கு போக விரும்பவில்லை" என கூறிய நாமலின் பதிலால் பொஹொட்டுவின் அமைச்சர்கள் வெறுங்கையுடன் வீட்டிற்கு வர வேண்டியதாயிற்று.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பெறுவதற்கு தேவையான விலைமனு கோரப்படும் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்குத் தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கு விலை மனுக்களை சமர்ப்பிக்கலாம்.
விலை மனு சமர்ப்பிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், அதற்கான பொருத்தமான நிறுவனங்களைத் தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர் தனிஷ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.