web log free
May 26, 2024
kumar

kumar

பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான அமல் சமிந்த சில்வா என்ற 39 வயதான ரத்மலானே அஞ்சு பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸாருக்கு இந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் சர்வதேச பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த இவர், கடந்த காலத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார். 

மாகாண ஆளுநர்களாக பதவி வகிக்கும் நான்கு பேர் விரைவில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீக்கப்படும் நான்கு ஆளுநர்களில் ஒருவர் வேறு மாகாண ஆளுநராக இடமாற்றம் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு ஆளுநர் பெரிய அரசு நிறுவனத்தில் உயர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆளுநருக்கு அவர் தற்போது பதவி வகிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான அமைச்சர்களின் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே அவருக்கு இடமாற்றம் வழங்கப்படும்.

இந்நிலையில், இடமாற்றம் செய்யப்படும் ஆளுநரை தவிர, மற்ற இடங்களுக்கு, மூன்று புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, வட்டாரங்கள் தெரிவித்தன.

அதற்கு மூன்று முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா சந்தேக நபராக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID)  பெயரிட்டுள்ளது.

இதன்படி, ஜே.ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தீயிட்டு கொழுத்தியதுடன், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது.

பெண் பொலிஸ் மா அதிபரின் கீழ் பணியாற்ற பொலீசார் தயாராக வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமசிங்க கூறுகிறார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் மா அதிபர் பதவியை அடைவதற்குத் தேவையான பின்னணி ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த நாட்டில் பெண் பொலிஸ் மா அதிபர் என்ற கனவு நனவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற குழு மண்டபத்தில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு முன்னிலையில் கருத்து வெளியிடும் போதே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் இன்று நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனுதவி தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வாக்கெடுப்பின் போது, சபையில் 79 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி, வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அது தொடர்பில் குறித்த கட்சி ஆறு விடயங்களை முன்வைத்திருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் A.H.M. பெளஸி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திசாநாயக்க, அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்த ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, நிமல் லன்ஸா, A.L.M. அதாவுல்லா ஆகியோர் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சுதந்திர மக்கள் கூட்டணி, உத்தர லங்கா சபாவ என அரசாங்கத்தில் இருந்து விலகி செயற்படுவோரும், தேசிய மக்கள் சக்தியும் யோசனைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஷஷி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டவிரோதமான இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக ஷஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அன்றைய தினம் தற்காப்பு தரப்பினர் தயாராக இல்லாவிட்டாலும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் இவ்வாறு தாமதித்தால் திறந்த நீதிமன்றில் இந்த வழக்கை முடிக்க முடியாது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார். 

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், விவசாயத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கும் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பெருந்தோட்ட சீர்திருத்தக் குழுவின் (PRC) உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

காணிப்பிரச்சினை உட்பட விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், தற்போது தீர்க்கப்பட்டு வரும் மகாவலி காணிப்பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தோட்டக் கம்பனிகளின் செயற்பாடுகளும் இங்கு ஆராயப்பட்டன. அடுத்த 10 அல்லது 15 வருடங்களில் குத்தகைக் காலம் முடிவடைவதே உள்ளுர் தோட்டக்காரர்கள் எதிர்கொள்ளும் பிரதான சவாலாக உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய நவீனமயமாக்கலுக்கு அரசாங்கம் முன்னோக்கிச் சென்றால், தோட்டக் கம்பனிகளுக்கு புதிய குத்தகை வழங்கப்பட வேண்டும் என்றார்.

எவ்வாறாயினும், அனைத்து நிறுவனங்களின் செயற்பாடுகளும் உகந்த மட்டத்தில் இல்லாததால் புதிய குத்தகைகளை வழங்குவதற்கான அடிப்படையை தயார் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோட்ட மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

சில ஆட்சியாளர்கள் நாட்டுக்கு இழைத்த மோசமான செயல்களுடன் ஒப்பிடும் போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடவுளின் வரப்பிரசாதம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிலைமைகளை விட மோசமான விடயங்கள் ஆட்சியாளர்களின் ஊடாக நாட்டில் இடம்பெற்றுள்ளதாக கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

இந்நாட்டு ஆட்சியாளர்கள் நாட்டிற்குச் செய்த மோசமான விடயங்களையும் நாணய நிதியத்தின் நல்ல நிலைமைகளையும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்ட முடியும் என கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

ஷங்கிலா ஹோட்டல் அமைந்துள்ள நிலத்தை இலங்கையின் ஆட்சியாளர்கள் 40 வருடகால வரிச்சலுகையுடன் வெளிநாட்டினருக்கு வழங்கியதாகவும் அதில் ஒரு சதம் கூட நாட்டிற்கு கிடைக்கவில்லை எனவும் மன்னாரில் உள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கூட டென்டர் செய்யாமல் அதானிக்கு வழங்கப்பட்டதாகவும் இவை தேசிய குற்றங்கள் எனவும் அவர் கூறினார். 

கொலன்னாவை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (29)  முற்பகல் 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துள்கோட்டே, நாவல, கொஸ்வத்தை, இராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதியுடன் இணையும் குறுக்கு வீதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொலன்னாவை நீர் விநியோகப் பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணைமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

​நெடுந்தீவு படுகொலைச் சம்பவத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 100 வயது பெண்ணும் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

ஏப்ரல் 22 அன்று நெடுந்தீவில் ஒரு வீட்டில் வசித்த இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 

தாக்குதலில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 100 வயதுடைய பெண் தாக்குதல் இடம்பெற்று ஐந்து நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் இந்த கொடூரமான குற்றத்தை செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபரிடம் இருந்து 3 தங்கச் சங்கிலிகள், 2 ஜோடி தங்க வளையல்கள், 8 மோதிரங்கள், 1 ஜோடி காதணிகள், 1 தங்கப் பதக்கம், 2 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.