அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் கோதுமை மா மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினாலும் ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் வெள்ளை சீனியின் விலை மெட்ரிக் தொன் ஒன்றின் விலை 500 டொலர்களில் இருந்து 750 டொலர்களாக அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த தினம் இலண்டன் சென்றிருந்த நிலையில் இன்று காலை ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது.
நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 7.4 வீதமாக பதிவானதுடன், அந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 9.4 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பங்கள், பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்ட உணவு பாதுகாப்பின்மை பிரச்சினையினால் சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடும் செலவுகளை குறைத்துக்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடும்பங்களின் வாழ்வாதார வழிமுறைகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் சில வருடங்களுக்குள் வறுமை நிலை 25 வீதத்தையும் கடந்துசெல்லும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.
2023 - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் வறுமை நிலை மேலும் அதிகரித்துச் செல்லுமெனவும் உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் கொந்தளிப்பான வளிமண்டலம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்காரணமாக எதிர்வரும் சில தினங்களில் இந்த அமைப்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் சூறாவளியாக மாறும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
5 மற்றும் 10 வடக்கு அட்சரேகை மற்றும் 90 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும், அவ்வப்போது அது மணிக்கு 60 கிமீ வேகத்தில் அதிகரிக்கும்.
01 மற்றும் 04 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 மற்றும் 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடையில் காற்று குவிதல் வலயம் காரணமாக, இந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர்களாக காணப்படுவதுடன், அது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
5 மற்றும் 10 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 90 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 01 மற்றும் 04 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 மற்றும் 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் எதிர்காலத்தில் கடல்சார் சமூகம் மற்றும் மீனவர்கள் பயணிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரை அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கடற்படையினர் மற்றும் கடல்சார் சமூகம் கோரப்பட்டுள்ளது.
உத்தேச பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாவின் சில பிரிவுகளுக்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தது தெரிந்ததே.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களுக்கு உடன்பட முடியாது என அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இதேவேளை, உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராக வாக்களிப்பேன் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலைமையை கருத்திற் கொண்டு குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தச் சட்டமூலம் ஜனநாயகத்திற்குப் பாரிய அடியாகும் என சில வாரங்களுக்கு முன்னர் கூட்டறிக்கையில் திரித்துவ பீடாதிபதிகளும் குறிப்பிட்டுள்ளனர்.
வரைவு மசோதாவில் பயங்கரவாதத்தை வரையறுப்பது குறித்தும், டிஐஜிகளுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை மாற்றுவது குறித்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மகா சங்கத்தினரிடமிருந்தும், பொது சமூகத்தினரதும் கடும் எதிர்ப்பு காரணமாக, பாராளுமன்றத்தில் சமர்பிப்பது காலவரையறையின்றி பிற்போடப்பட்டதாகவும், சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்து சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று (07) காலை டுபாய் நோக்கி சென்றுள்ளார்.
அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே-649 விமானத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் தயா கமகே ஆகியோருக்கு ஆளுநர் பதவி வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவர் வருகையின் பின்னர் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் செலவின வரம்புச் சட்டம் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று செலவு வரம்பு மீறப்பட்டமை உறுதி செய்யப்பட்டால் அவ்வாறான கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பிறகு, அந்தந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் முன்வைத்த அரசியல் கட்சிகளின் செலவுகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் பிரசாரங்களுக்கு எதிர்பாராத செலவுகளைச் சந்திக்க நேரிடுவதாக வேட்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செலவு வரம்பை மீறுவதால் பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் அறியமுடிகிறது.
அரசியல் கட்சிகளும் தங்களது பிரசார நடவடிக்கைகளுக்காக பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளதாக அக்கட்சியின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையினைக் கருத்திற் கொண்டு, தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டம் காரணமாக, தமது தேர்தல் பிரசாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், வாக்குப்பதிவு திகதியை தாமதப்படுத்தினால், பிரச்சாரத்தை கைவிட வேண்டும் என்றும், வாக்குப்பதிவு முடிவுகள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடல் நிலை: பேருவளையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமான பிரித்தானியாவின் புதிய பேரரசராக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் இன்று (06) முடிசூட்டப்பட்டார்.
கடந்த செப்டம்பரில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து இளவரசர் மூன்றாம் சார்ள்ஸ், மன்னர் அரியணைக்கு உரித்துடையவரானார்.
இதன் முடிசூட்டு விழா தலைநகர் லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று (06) கோலாகலமாக நடைபெற்றது.
பிரித்தானியாவில் 70 ஆண்டுகள் கழித்து முடிசூட்டு விழாவொன்று நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயம் வரை அரங்கேறிய கண்கவர் வாகனப் பேரணியுடன் முடிசூட்டு விழா ஆரம்பமானது.
இம்முறை மன்னர் சார்ள்ஸும் அவரது மனைவி கமிலாவும் ஒவ்வொரு முடிசூட்டு விழாவுக்கும் பயன்படுத்தப்படும் தங்க இரதத்தில் அல்லாமல் வைரவிழா அரச இரதத்தினூடாக வெஸ்ட்மினிஸ்டர் அபே நோக்கி பயணித்தனர்.
பின்னர் கிரேட் வெஸ்ட் நுழைவாயில் வழியாக உட்பிரவேசித்த சார்ள்ஸ் மன்னர் தேவாலயத்தின் மத்திய பகுதியூடாக சென்று முடிசூட்டும் இருக்கையில் அமர்ந்தார்.
மன்னரின் வழக்கமான ஆடைகள் தவிர்க்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க புனித எட்வர்ட் மகுடத்தை சூட்டுவதற்காக றோயல் கதிரையில் அமர வைக்கப்பட்டார்.
இதுவரை 26 மன்னர்கள் மற்றும் மகாராணிகளுக்கு இங்கு கிரீடம் அணிவிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அரசருக்கென்றே சிறப்பாக தயாரிக்கப்படும் புனித எண்ணெய் சார்ள்ஸ் மன்னரின் தலை, உடல் பகுதியில் தேய்த்துவிடப்பட்டதுடன் அவரது தலை, நெஞ்சு மற்றும் கைகளில் சிலுவை அடையாளமிடப்பட்டு இராஜபிஷேகம் இடம்பெற்றது.
பின்னர் அரசரிடம் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை கையளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்பட்டு அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நியாயம், கருணை போன்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தால் உருவாக்கப்பட்ட வாத்து ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதன் பின்பு இறுதியாக மன்னரின் தலையில் ஆர்ச் பிஷப் புனித எட்வர்ட்டின் கிரீடம் சூட்டப்பட்டது.
இதற்கமைய புனித எட்வர்ட்டின் கிரீடத்தை சூடிய 07 ஆவது மன்னராக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் வரலாற்றில் பதிவானார்.
அவருக்கு முன்பாக இரண்டாம் சார்ள்ஸ், இரண்டாம் ஜேம்ஸ், மூன்றாம் வில்லியம், ஐந்தாம் ஜோர்ஜ், ஆறாம் ஜோர்ஜ் மற்றும் இறுதியாக 1953 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மாகாராணி ஆகியோர் எட்வர்ட் கிரீடத்தை சூடியுள்ளனர்.
22 கரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட 360 ஆண்டுகள் பழமையான இந்தக் கிரீடம் 30 சென்றிமீற்றருக்கும் அதிக உயரமும் 2 தசம் 23 கிலோகிராம் எடையும் கொண்டதாகும்.
இதன்போது ட்ரம்பட் வாத்தியம் இசைக்கப்பட்டதுடன் ஐக்கிய இராச்சியம் முழுவதும் மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
எளிமையான முறையில் இடம்பெற்ற இந்த முடிசூட்டு விழாவில் இராணி கமிலாவுக்கு உரிய சடங்குகள் நிறைவேற்றப்பட்டு இராணிக்கான கிரீடம் சூட்டப்பட்டு அரியணையில் அமர்த்தப்பட்டார்.
ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் இராணி மேரியின் முடிசூட்டு விழாவிற்காக பயன்படுத்தப்பட்ட கிரீடமே அவருக்கு சூட்டப்பட்டது.
இதனையடுத்து மன்னரும் இராணியும் அவரவர் சிம்மாசனங்களில் இருந்து எழுந்து புனித எட்வர்ட் தேவாலயம் நோக்கிச் சென்றனர்.
அங்கு மன்னரின் தலையிலிருந்து புனித எட்வர்ட் கிரீடம் கழற்றப்பட்டதுன் மன்னருக்கான முடிசூட்டப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வௌியேறினர்.
பின்னர் மன்னரும் அரச குடும்பத்தினரும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அவர்கள் வந்த அதே வழியில் மீண்டும் புறப்பட்டனர்.
1831 இல் மன்னர் ஆறாம் வில்லியம் முடிசூடப்பட்டதிலிருந்து ஒவ்வொரு முடிசூட்டு விழாவிலும் பயன்படுத்தப்பட்டுவந்த 260 ஆண்டுகள் பழமையான தங்க அரச இரதத்தில் இவர்கள் இம்முறை பயணித்தமை விசேட அம்சமாகும்.
74 ஆவது வயதில் பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் முடிசூடியிருக்கிறார்.
1948 ஆம் ஆண்டு முடிக்குரிய இளவரசராக பிறந்த சார்ள்ஸ் மன்னர் 1969 ஆம் ஆண்டு வேல்ஸின் இளவரசராக முடிசூட்டப்பட்டார்.
1971 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த அவர் 1976 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனமொன்றை ஆரம்பித்ததுடன் 1981 ஆம் ஆண்டு டயனா ஸ்பென்ஸரை மணமுடித்தார்.
1982 ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமும் 1984 ஆம் ஆண்டு இளவரசர் ஹரியும் பிறந்தனர்.
1996 ஆம் ஆண்டு இளவரசி டயனாவுடனான விவாகரத்தையடுத்து மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் 2005 ஆம் ஆண்டு இளவரசி கமிலாவை கரம்பிடித்தார்.
இன்று நடைபெற்ற முடிசூட்டு விழாவில் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள், 203 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
முடிசூட்டு விழாவுக்கான பாதுகாப்பு கடமைகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகளவான பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் முடிசூட்டு விழா பல சர்வதேச ஊடகங்களில் நேரடி ஔிபரப்பப்பட்டது.
முடிசூட்டு விழாவுடன் நாளை வின்ட்சர் கோட்டையில் பல பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.