தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டம் இறுதி முடிவு எடுக்கப்படாமலேயே முடிவடைந்த நிலையில், ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்துக்கு வந்திருந்த போதிலும், நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான உத்தேச திருத்தத்தை எதிர்க்கட்சிகள் நிராகரித்ததால், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கூட்டு கட்சிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) மற்றும் றிஷாட் பதியுதீன் தலைமையிலான ACMC ஆகியவை கலந்து கொண்டன, இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
டலஸ் அழகப்பெரும குழுவினரும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
“எவ்வாறாயினும், சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையை தனது குழு எதிர்ப்பதாக டலஸ் அழகப்பெரும கூறினார்,” என்று கணேசன் கூறினார்.
தனது தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தலை ஒத்திவைப்பதை மாத்திரமே எதிர்த்ததாக அழகப்பெரும ஏற்கனவே கூறியிருந்தார். தேர்தல் சீர்திருத்தம் என்பது மக்கள் நீண்டகாலமாக விரும்பிய ஒன்று என்பது அவர் கருத்து. தேர்தல் முறையை சீர்திருத்துவதற்கான உண்மையான நடவடிக்கை வரவேற்கத்தக்கது என அவர் முன்னதாக பகிரங்கமாக கூறினார்.
இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஊடாக நிரந்த நியமனம் வழங்குவதே நியாயமானது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இது குறித்து ஆளுநர் அலுவலகம் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவது தொடர்பில் அண்மையில் பிரதமருடன் விசேட கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அமைச்சரவை பத்திரம் ஊடாக நியமனங்கள் வழங்குவதற்கான அனுமதி பெற்று தருவதாக பிரதமர் ஆளுநரிடம் உறுதியளித்திருந்தார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ளன.
இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது அவ்வாறு எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.
வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கண்டி - பேராதனை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்றை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் ஆளும் கட்சி எம்பிக்களின் விசேட குழு கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், குழுக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கேட்க உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என சமூக ஆர்வலர் ஓஷால ஹேரத் உரிய மனுவை சமர்ப்பித்திருந்தார்.
கிருலப்பனை மாவத்தை, இலக்கம்: 54க்கு அருகில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு வானத்தை நோக்கிச் சுட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, சந்தேக நபர்களின் நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதியின் பதில் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடாத வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
*மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்
*பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம்
*மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவையான அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு ஆகியவை அத்தகைய அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தை அங்கீகரிப்பதில்லை என அரசியலமைப்பு சபை நேற்று (17) தீர்மானித்துள்ளது.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றி மீண்டும் பொலிஸ் மா அதிபரை அந்த பதவியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து பொலிஸ் மா அதிபரை மீள் நியமனம் செய்வது தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தவே ஜனாதிபதி இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தார்.
கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்லாமிய போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் காணாமல் போன அனுலா ஜயதிலக்க உயிரிழந்தமை இன்று (17) உறுதிப்படுத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
சடலம் அடையாளம் காணப்பட்ட இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலிய பொலிஸார் அனுலா ஜயதிலக்கவின் உடலை தூதரகத்திடம் ஒப்படைப்பார்கள் எனவும் இறுதி மரியாதை மற்றும் சமய சடங்குகள் பற்றிய தகவல்கள் மிக விரைவில் கிடைக்கும் எனவும் பண்டார தெரிவித்தார்.
இறுதிக் செயற்பாடுகளின் பின்னர் அனுலா ஜயதிலகவின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தூதுவர் பண்டார தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இஸ்லாமிய போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட குழுவில் இலங்கையர்களும் உள்ளனர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பண்டார தெரிவித்தார்.
ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக எல்லையைக் கடந்ததாக இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதுடன், மேற்கில் இருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலங்கையர்களை வெளியேற்ற பாலஸ்தீன பிரதிநிதி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.