இன்று (23) முதல் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை பயணிகள் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
24 மணித்தியாலங்களும் இது தொடர்பில் நாடளாவிய ரீதியிலான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் குழுவிற்கு மட்டும் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
வரிய குழந்தைகளுக்கும், அஸ்வேசும சலுகைகள் இல்லாத குழந்தைகளுக்கும் ரூ.6,000 உதவித்தொகை வழங்குவதற்கு பதிலாக, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 06 வீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டு செயலாளர் மங்கள மத்துமகே தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலை மாணவர்களிடம் பாடசாலை தவணையின் போது பணம் வசூலித்து தனியார் வகுப்புகளுக்கு கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சுற்றறிக்கையில் தங்கள் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகு அல்லது வார விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல்வேறு வெளி இடங்களில் பணம் வசூலித்து கூடுதல் வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்கப்பட்டால், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்படாமல் ஏதேனும் கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை இம்மாதம் 31ஆம் தேதிக்கு முன்னதாக அந்தந்த வங்கிகளில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கணக்கு வைத்திருப்பவர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு பதிலாக வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திர இலக்கத்தை வழங்கி வங்கி கணக்குகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையர் அல்லாத ஒருவர் செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவதன் மூலம் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் இழப்பீடு பெற தேசிய அடையாள அட்டை எண் அவசியம் என மத்திய வங்கி கூறுகிறது.
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்குவதற்கான அறிவிப்பின்படி, அத்தகைய அறிக்கையை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பெயர் பட்டியல் மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலைமையை கருத்திற் கொண்டு, தேர்தல் ஆணைக்குழு தமது செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பட்டியலை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தனது தாயாரின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவமனைக்குச் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஜனாதிபதியின் தாயார் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.
பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் போது பஸ்ஸில் 30 பேர் வரை பயணித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் காயமடைந்த நிலையில் திக் ஓயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசிய பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டியில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.
அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரது சிபாரிசின் அடிப்படியில் ஏராளமான மதுபானசாலைகளுக்கான உருமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சொல்லியிருந்தார்கள்.
அந்த அரசியல் லஞ்சம் என்ற விவகாரத்தில் தங்கள் பதவிக்கு வந்து மூன்று நாள்களில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள்.
ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் யார் யாருக்கு உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.
யாருடைய சிபாரிசில் இந்த உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் தான், அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டமை என்பதை உறுதி செய்யமுடியும்.
ஆகவே, லஞ்சம், ஊழல் அனைத்தையும் முற்றுமுழுதாக ஒழித்துவிடுவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம். மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் சுற்றுப் பின்வாங்குவதாக தோன்றுகிறது.
ஒவ்வெரு மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அரசாங்க கட்சியே தேர்தலுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.
அப்படியானால், அந்த பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிடவேண்டும். இதுவொரு பாரதூரமான விடயம். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்.
முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன என்றார்.
நாட்டின் அரிசி நெருக்கடிக்கு முக்கிய காரணம் கடந்த அரசாங்கம் ஒரு சிலருக்கு அரிசி ஏகபோகத்தை உருவாக்கி சந்தைப்படுத்தல் சபையை பலவீனப்படுத்தி அரச இயந்திரத்தை உடைத்ததேயாகும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் உப்பு, அரிசி, தேங்காய் இல்லை என்றால் அதற்கு முன்னைய அரசாங்கங்களே பொறுப்பு எனவும் தற்போதைய அரசாங்கம் இன்னும் 40 நாட்களை பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2048 ஆம் ஆண்டு நாட்டின் அபிவிருத்திக்காக காத்திருக்கத் தயாராக இருக்கும் மக்கள் 48 நாட்கள் கடக்கும் முன்னரே தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய கருத்தியலை சுமந்து வருவதாகவும் நளீன் ஹெவேகே குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.