திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்தனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதனடிப்படையில் அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு நகரசபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இது இடம்பெற்றது.
இது தொடர்பில் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, கட்சி அரசியல், இனவாதம், நிறவெறி போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு, இந்த நாட்டை வெல்லக்கூடிய நாடாக மாற்ற ஜனாதிபதியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட ஒருவரை முன்வைக்கவில்லை. எந்த நேரத்திலும் சரியான நபரை முன்வைப்போம். எமது கட்சி பொஹொட்டுவ சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்கும்.”
கேள்வி – ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் பொஹட்டுவ சின்னத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி பொஹட்டுவ உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்ளலாம். அது நடந்தால் நாங்கள் பரிசீலிப்போம்.
கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செவ்வாய்க்கிழமை (02) அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.
மேலும் , எந்தவொரு தியாகமும் செய்யாமல் வெளிநாட்டுக் கடனுக்கான சலுகைகளைப் பெற வேண்டும் எனப் பலரும் பரிந்துரைத்தாலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் சர்வதேச நடைமுறைகளின்படி அவ்வாறு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பிரதான கடன் தொகையைத் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவில்லை என்று சிலர் குற்றம் சாட்டினாலும், உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன் வழங்குநர்கள் பிரதான கடன் தொகையை ஒருபோதும் துண்டிக்க மாட்டார்கள் என்பதோடு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல் , கடன் சலுகை காலம், வட்டி விகிதக் குறைப்பு என்பவற்றுக்கு சலுகை பெற முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதிகாரம் கிடைத்தால் ஆரம்பக் கடனில் 50% வீதத்தை துண்டிக்க கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சிலர் கூறினாலும் அந்த அறிக்கைகள் அவர்களுக்கு சர்வதேச பொருளாதார முறைமைகள் பற்றிய எந்தவித புரிதலும் இல்லை என்பதையே காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதிகாரம் கிடைத்தால் ஆரம்பக் கடனில் 50% வீதத்தை துண்டிக்க கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சிலர் கூறினாலும் அந்த அறிக்கைகள் அவர்களுக்கு சர்வதேச பொருளாதார முறைமைகள் பற்றிய எந்தவித புரிதலும் இல்லை என்பதையே காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694ரூபாவாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
"எங்களுக்கு அழைப்பிதழ்கள் வந்துள்ளன, எங்கள் தலைவரும் கலந்துகொள்வார். பயணத்தின் நேரம் திட்டமிடல் மூலம் தீர்மானிக்கப்படும். தேவைப்படும்போது இந்த விஜயங்களை மேற்கொள்வது முக்கியம்," என்று அவர் கூறினார்.
தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விஜயம் இடம்பெறும் என வலியுறுத்திய SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேர்தலுக்குப் பின்னர் செல்வதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்தார்.
எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4 ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.
இதன்போது,12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 3,790 ரூபாவாக உள்ளது.
5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவாலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது 91ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.
420 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379ரூபாவாகும்.
377 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
இதேவேளை, ஓட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றரின் விலை தொடர்ந்து 317 ரூபாவிற்கும் மண்ணெண்ணெய் லீற்றரின் விலை தொடர்ந்து 202 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(30) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறை கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற "ஒன்றாக வெல்வோம்" மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்.