ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 30ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் நடத்தப்படும் பேரணியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இணைந்துள்ளனர்.
இதன்படி, அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு ஆதரவான மாத்தறை மாவட்ட மக்கள் மாத்திரமே இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அவரது பயணத்தின் போது, தற்போதைய நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மேற்பார்வையிடுவதையும், இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பிலும் அவரது விஜயத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
சர்வதேச கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்நாள் மீன்பிடிக் கப்பலின் ஓட்டில் நான்கு உரப் பொதிகளில் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உர மூட்டைகளில் 100 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் போதைப்பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பல நாள் மீன்பிடி படகு தற்போது காலி துறைமுகத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (14) விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கத் தயாராக உள்ளேன் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடிக் குரலாக சர்வதேச நீதி கோரிய பயணத்தில் காத்திரமாகப் பங்கேற்ற தன்மைகளோடு பயணித்து அனுபவமுள்ளவளாகிய நான் அந்தக் களத்தில் பயிற்சி பெற்றுள்ள அனுபவத்தோடு துணிந்து தமிழ்ப் பொது களமிறங்கத் தயாராக உள்ளேன் என்பதை இது குறித்த அக்கறையுள்ள அனைவரின் கவனத்துக்கும் இத்தருணத்தில் கொண்டுவருவது எனது கடமையாகிறது.
அதுவும், எந்தக் கட்சியினதும் அல்லது கூட்டினதும் பிரதிநிதியாக அன்றி, ஈழத்தமிழருக்கான பொதுப் பிரதிநிதியாக என்னை மாற்றிக்கொள்ளவும், இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பு மேற்கொள்ளப்படும்போது அதற்குக் கட்டுப்பட்டு இயங்கவும் தயாரக உள்ளேன் என்பதையும் பரந்துபட்ட சமூகத்துக்குத் தெரிவிப்பதும் எனது கடமையாகிறது.
அதுமட்டுமன்றி, இவ்வாறான தன்மைகளோடு என்னை விடவும் ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகமாக நிறுவப்படக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டால் அவ்வாறான வேட்பாளரை ஆதரிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்பதையும் சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன் என்றார்.
இந்த நாட்டில் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அது ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? என்று சொல்லவில்லை.
மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
நேற்று (13) செய்தியாளர் மாநாட்டை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினரின் திட்டமிட்ட செயல் என தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியின் உதவிக் காவல் கண்காணிப்பாளர் இதற்கு ஆதரவு வழங்கினார்.
அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் 2023 செப்டம்பர் 17ஆம் திகதி பதிவாகியுள்ளது.
அந்த துப்பாக்கிச் சூட்டில் எம்.பி பயணித்த காரின் பின் பக்க கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் தற்போது நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரின் கைகளில் தனது துப்பாக்கியை மீண்டும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நாடகத்தின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்து தற்போது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து குடும்பத்துடன் கனடாவிற்கு சென்றுள்ளார்.
தங்களது விரியும் பாதையில் ஈர்ப்புமிக்க முன்னேற்றத்தை பதிவுசெய்திருக்கும், லங்கா ஸ்பைசஸ் தனியார் நிறுவனமானது, கொழும்பு நாவலையிலும், கண்டியின் கட்டுகஸ்தோட்டையிலும் தன்னுடைய 6வது மற்றும் 7வது Mc Currie காட்சியறைகளை சமீபத்தில் திறந்துள்ளது. Mc Currie பிரான்சைஸ் தனியார் நிறுவனத்தின் கீழ் இயங்கும், இவ்விருப் புதிய கிளைகளும் அணுகுவதனை வளப்படுத்துவதிலும் நாடாளவியரீதியிலான பன்முக வாடிக்கையாளர் பிரிவுகளிற்கு சேவையாற்றுவதிலுமான வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பிற்கு உதாரணமாக விளங்குகின்றது.
கொட்டாவை, பொரளை, கல்கிசை, கிருலப்பனை, மற்றும் மாத்தளையில் உள்ளவற்றைப் போன்றே காணப்படும், புதிதாக திறக்கப்பட்ட காட்சியறைகளானவை, 120 இற்கும் மேற்பட்ட Mc Currie பண்டகசாலைகளிலிருந்தான அபரிதமான தெரிவுகளை வழங்குகின்றது. பந்துன், ஊறறுகாய், சம்பல், சட்னி வகை, மற்றும் பேஸ்ரி வகைகள் போன்ற உலர்த்தப்பட்ட நறுமணப்பொருட்கள் முதல் சாடிகளில் அடைக்கப்பட்ட சுவையுணவுகள் வரையில் வாடிக்கையாளர்கள் இலங்கைச் சுவையின் பன்மைத்துவங்களை அனுபவித்து மகிழலாம்.
தசாப்தகாலமாக, Mc Currie ஆனது உத்தியோகப்பூர்வ இலங்கை நறுமணத் திரவியங்களது முகவராகவே விளங்கி, உள்ளுர் மற்றும் சர்வதேசம் என இரு தளங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் உள்ளுர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களிற்கு சமமாகவே சேவையை வழங்கும் வகையிலேயே அனைத்து Mc Currie காட்சியறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
லங்கா ஸ்பைசஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. மஞ்சு ஆரியரத்ன அவர்கள், Mc Currie இன் பௌதீக தடங்களை விரிவுபடுத்துவதன் மூலோபாய முக்கியத்துவத்தினை வலியுறுத்திக்கூறினார். 'Mc Currie ஆனது உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இலங்கையர்களின் இதயத்தில் குன்றா இடத்தினை பிடித்துள்ளது. எம்முடைய விரிவுபடுத்தும் மூலோபாயமானது அனைத்து பின்னணியிலும் காணப்படும் வாடிக்கையாளர்களுடன் ஆழமான இணைப்பை பேண விரும்புகின்றோம் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.'
லங்கா ஸ்பைசஸ் தனியார் நிறுவனத்தின் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்கள் மீதான தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தியதில் கட்டுகஸ்தோட்டை மற்றும் நாவல காட்சியறைகளின் திறப்புவிழாவானது சில குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டிருந்தது. புதிய காட்சியறைகளை திறந்துவைப்பதில் சிரேஷ்ட ஊழியர்களிற்கு முன்னுரிமையளித்து கௌரவப்படுத்தியமையானது, தன்னுடைய ஊழியப்படை குறித்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பிற்கு மேலுமொரு எடுத்துக்காட்டாக விளங்கியது.
தரம் மற்றும் தூய்மை என்பவற்றால் இயக்கப்படும், Mc Currie ஆனது இலங்கையின் நறுமண துறையை தலைமைத்தாங்க ஆர்வங்கொண்டுள்ளது. 200 இற்கும் மேற்பட்ட பல்வேறு வகைப்பட்ட உற்பத்திகளுடன், நிறுவனமானது அதிகாரபூர்வமான இலங்கையின் சுவைகளை உலக சந்தைக்கு கொணர்வதில் தொடர்ச்சியாக புத்தாக்கங்களை மேற்கொள்கின்றது.
Mc Currie இன் சர்வதேச பிரசன்னமானது அவுஸ்திரேலியா, மாலைத்தீவுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரையில் சுழல்கின்றது. உற்பத்திகளின் ஒருமைப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக, நிறுவனமானது அதிநவீன வளிநீக்கி பொதியிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதுடன் ISO 22000:2010 உணவு பாதுகாப்பு முறைமைகள், ஹலால் சான்றிதழ் மற்றும் SEDEX உறுப்புரிமை உள்ளிட்ட கடுமையான உணவுப் பாதுகாப்பு தராதரங்களையும் பேணுகின்றது.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 05 இல் இருந்து 06 வருடங்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜமைக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
06 வருடங்களாக இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்களாக குறைக்கப்பட்டது போன்று பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் பதவிக்காலத்தை 05 வருடத்திலிருந்து 06 வருடங்களாக நீடிக்க முடியும்.
அதன்படி பொது வாக்கெடுப்பு தேவையில்லை என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, கட்சியின் தீர்மானத்தின் பிரகாரம் வெற்றி வாய்ப்பு உள்ளவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தமது குழு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பல முதியவர்கள் இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தானும் பொருத்தமானவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அங்கு எந்த வேட்பாளரும் முன்வைத்து வெற்றி பெற முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், கட்சி கூட்டணியாக உதவினால் தானும் வெற்றிபெற முடியும் என்றார்.