web log free
September 20, 2024
kumar

kumar

நான்கு வருடங்களாக கடுங்காவல் சிறையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதற்கான விசேட உண்மைகள் எவையும் நீதிமன்றில் வெளிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.

ஞானசார தேரரின் உடல்நிலை மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு, அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் ஞானசார தேரரிடமிருந்து இந்த பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர்.

பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இம்மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி பணிப்பாளர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும்.

அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ 135 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலை ரூ. 4,115. 

 5 கிலோ 55 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலை ரூ.1,652.

2.3 கிலோ 23 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலை 772 ரூபா. 

மாவட்ட அடிப்படையில் விலைகளில் மாற்றம் ஏற்படும். 

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 440 ரூபாவாக அமைந்துள்ளது.

லங்கா சுப்பர் டீசலின் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.புதிய விலை 245 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் லங்கா ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை.

 

“கடந்த 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது” என்று பிரதமர் மோடி அக்கட்சி மீது ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பாக வெளியாகியிருக்கும் தரவு ஒன்றின் அடிப்படையிலான ஊடகக் கட்டுரையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பான அந்தத் தரவுகள் என்னை திகைக்க வைக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்படி அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என்ற புதிய உண்மை அதில் வெளிப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்தத் தரவு காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்பமுடியாது என்று மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது” என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் அந்தத் தரவுகளின் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “1974-ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது. அவர்கள் அரசியலுக்காக பாரத மாதாவை மூன்றாகப் பிரித்தனர்” எனக் கூறியிருந்தார்.

ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்திருக்கும் கச்சத்தீவினை பாரம்பரியமாக தமிழக, இலங்கை மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவினை இலங்கை அரசின் பகுதியாக அங்கீகரித்தார்.

இதனிடையே, மார்ச் 15-ம் திகதி கன்னியாகுமாரியில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த காலத்தில் திமுக செய்த பாவத்தினால் தான் தமிழக மீனவர்கள் இலங்கையிடமிருந்து இன்னல்களை சந்திக்கின்றனர்” என்று பேசியிருந்தார்.

இதனைக் கண்டித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் அப்பட்டமாக பொய் சொல்வதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக அரசின் கடும் எதிர்ப்பை மீறியே கட்சத்தீவு (1974, 1976 ஒப்பந்தங்கள்) இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். ஒரு மாநில அரசு நாட்டின் பகுதி ஒன்றை மற்றொரு நாட்டுக்கு கொடுக்கும் என்று நம்பும் அளவுக்கு பிரதமர் அப்பாவியா” என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசபந்து தென்னகோன் தலைமையில் பல மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நீதி நடவடிக்கையானது பாதாள உலகமும் போதைப்பொருளும் நாட்டிலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட பின்னரே முடிவுக்கு வரும் என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

திட்டமிட்ட குற்றக் கும்பலுடன் தொடர்பில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்த நடவடிக்கையை பாதியில் நிறுத்தினால் நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் எனவே சரியான புரிதலுடன் இதனை கையாள்வோம் என்றார். 

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த பணிகள் முடியும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் சபை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடனான தனித்தனி சந்திப்புகளில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் இருக்கும் என்பதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பொஹொட்டுவ தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியமை தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அவர்கள் அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

அங்கு பசில் ராஜபக்ஷ பதவியேற்காமல் கட்சியின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த சிரேஷ்ட எம்.பி.க்கள் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சுயாதீனமாக ஆதரவு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனையின் பின்னர் வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், இந்த உத்தரவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கடந்த வருடத்தை விட இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் பாதுகாப்பு அற்ற பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.