web log free
September 07, 2024
kumar

kumar

நிட்டம்புவ பிரதேசத்தில் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டம் தாக்கப்பட்டதை அடுத்து நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
 
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அநுராதபுரம் நோக்கி சென்ற வேளை, நிட்டம்புவையில் மறைக்கப்பட்டுள்ளார். அங்கு இடம்பெற்ற அசம்பாவிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்து. 
 
எனினும் பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாளைய தினமும்(16) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வெசாக் பூரணை தினமான இன்றும்(15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தற்போது டீசல் துளி அளவும் கையிருப்பில் இல்லை என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் பாரிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கப்பலில் டீசல் இறங்கியதும், டீசல் விநியோகம் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறாது எனவும், வெசாக் விடுமுறை காரணமாக கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிக்கு வராததே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

குழப்பத்துடன் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான பெரமுன கட்சி கூட்டம். இராணுவதளபதி, பொலிஸ்மா அதிபரை பதவி விலக கோரிக்கை  

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தீ வைப்பு தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் முதன்முறையாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடும் போது, குழப்பம் ஏற்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பலத்த பாதுகாப்புடன் கூடிய “ஜனாதிபதி மாளிகையில் மூடிய கதவு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர், அங்கு தங்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக ஜனாதிபதியை நோக்கி முழக்கமிட்டனர்.

அநுராதபுரத்தில் ஜனாதிபதியின் தனிப்பட்ட ஞானா அக்காவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தாக்குதல் கும்பல்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் போது இராணுவம் ஏன் அவரைப் பாதுகாத்தது என்று கோபமாக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

செவ்வாயன்று பாராளுமன்றம் கூடும் போது பிரதி சபாநாயகர் குறித்து விவாதிக்க விரும்பினார், ஆனால் எம்.பி.க்கள் தங்களுக்கு என்ன நடந்தது என்று விவாதிக்க விரும்பினர், அவர்களில் 60 பேர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை தீ வைக்கப்பட்டுள்ளதாக ஒரு எம்.பி கூறினார்.

தங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களை காப்பாற்ற பொலிசார் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் டோலவத்த, தனது வீடு மற்றும் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், சனிக்கிழமை கூட்டத்திற்கு வானில் சென்றதாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தனது வாகனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதால் தானும் சிறிய SUV வாகனத்தில் பயணித்ததாக தெரிவித்துள்ளார்.

சத்தமும் கோபமும் கொண்ட எம்.பி.க்கள், பொலிசார் மற்றும் இராணுவத் தலைவர்கள் தங்களுக்குக் கீழ் இருக்கும் ஆட்களை அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தவும், கலவரக்காரர்களைத் திருப்பி தாக்கவும் உத்தரவிடத் தவறியதாக விமர்சித்தனர்.

உணர்ச்சிவசப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் சரமாரியான முறைப்பாடுகளையடுத்து ஜனாதிபதி உடனடியாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவை அழைத்திருந்தார்.

பொலிஸ் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போகக் கூடும் என மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் அரசாங்கத்தை எச்சரித்ததாக விக்கிரமரத்ன பதிலடி கொடுத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி,பேசி, பல்வேறு இழிவான கருத்துகளை கூறி பொலிஸ் மா கடுமையாக விமர்சித்துள்ளனர்.  

"கோட்டா கோ காமா" மீதான தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

 ரமேஷ் பத்திரன கருத்துரைக்கையில், சம்பவத்தின் ஆரம்பம் முதல் ஜனாதிபதியுடன் தான் இருந்ததாகவும், ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கும் இராணுவத் தளபதிக்கும் உத்தரவு பிறப்பித்ததை தான் பார்த்ததாகவும் ஆனால் அந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக செயற்படாத இராணுவத் தளபதி தனது பதவியை இராஜினாமா செய்யுமாறும் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏனைய V.V.I.P.களின் பாதுகாப்புக்கு படையினர் ஈடுபடுத்தப்படாத நிலையில், ஜனாதிபதியின் தனிப்பட்ட ஞானா அக்காவை இராணுவம் எவ்வாறு பாதுகாத்தது என பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேட்டனர்.

எவ்வாறாயினும், ஞானா அக்காவின் வீடு மற்றும் விகாரையும் தீப்பிடித்து எரிந்ததாகவும், 150 இராணுவத்தினரால் அதனைத் தடுக்க முடியாமல் போனதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஞானாக்கா அவர் சமீபத்தில் காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை அடக்குவதற்காக போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வசிகம் செய்திருந்தார். 

ஞானா அக்காவின் சூனியத்தால் கூட சீற்றம் கொண்ட காளி, தெய்வம் கும்பலை தடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இதேவேளை, அண்மைய சம்பவங்கள் காரணமாக முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி, அவரது மனைவி மற்றும் குழந்தை மூன்று இடங்களில் தங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

தொழில் புரிபவர் என்ற வகையில் வருமான வரியை முறையாக செலுத்துவதாகவும், யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்துவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து பணம் திரட்டுவதற்காக அல்ல, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக தான் அரசியலுக்கு வந்ததாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தெரிந்தவரையில் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைவரும் அரசியலில் சம்பாதித்த பணத்தில் அல்ல, வங்கிக் கடனில் வீடுகளை கட்டியுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வீடுகளை இழந்த அமைச்சர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில் தற்காலிகமாக வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தபோதிலும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டனர்,

அவுஸ்திரேலியா, குயின்ஸ்லேண்ட், டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

கார் விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர்.

அவுஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5,088 ஓட்டங்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, குயின்ஸ்லேண்ட் பொலிஸார் கூறுகையில், சைமண்ட்சின் கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது. காரில் அவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்துள்ளார். அவரை காப்பாற்ற துணை மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், அதில் பலனில்லை என தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டில் முன்னாள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், சைமண்ட்சும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  இஷாக் ரஹுமான் ஆகியோர் இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக தெரிவித்த இவர்கள், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும் இதன் போது அவர்கள் தெரிவித்தனர்.

மேற்குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டுள்ளார்.

அமெரிக்க தூதுவர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பல விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, ​​நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
 

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (13) இரவு வெளியிடப்பட்டது.

ஒரு நாட்டை நடத்துவதற்கு அரசாங்கம் இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனினும் ரணில் விக்கிரமசிங்க மீதும் நம்பிக்கை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு அவரது வரலாறு களம் அமைக்கவில்லை என்றார்.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்தபோது பின்பற்றிய நிகழ்ச்சி நிரலை மேலும் அமுல்படுத்தாது, நாடு மேலும் பாதாளத்திற்குச் செல்லாத வகையில் தொடர்ந்தும் செயற்பட்டால், நாட்டை சீர்குலைக்காத வகையில் அரசாங்கம் செயற்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 12, புதுக்கடை வீதியைச் சேர்ந்த சட்டத்தரணி சேனக பெரேராவினால் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு இன்று (13) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்