web log free
October 31, 2024
kumar

kumar

சிறுநீரக மோசடி தொடர்பில் இரண்டு வைத்தியர்களுக்கு எதிராக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் இலங்கை மருத்துவ சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த இரு வைத்தியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்க குழுவினால் ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் செயலாளர் டொக்டர் ஆனந்த ஹபுகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹெவ்லொக் வீதியில் வசிக்கும் கலாநிதி ருவன் எம். ஜயதுங்க இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்கள் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண் வைத்தியசாலையில் இந்த வைத்தியர்கள் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. சிறுநீரக மோசடி தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2013ஆம் ஆண்டு சிறுநீரக மோசடி தொடர்பாக இந்தியப் பிரஜை ஒருவர் சிஐடியால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் இரண்டு வைத்தியர்கள் தொடர்பிலும் தகவல் பதிவு செய்துள்ளதாக இலங்கை மருத்துவ சபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடர்பாக மதுவரி திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் தரமற்றவை என கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மதுபானங்களுக்கு தரத்தை அறிமுகப்படுத்திய பின்னர் விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யப்பட்ட மதுபான மாதிரிகள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் கிடைத்த அறிக்கையை அடுத்து, குறித்த மதுபான் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் கடந்த மே 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரமான நிலைமையின் போது தீ வைக்கப்பட்டன.

அந்த சம்பவம் நடப்பதற்கு முன்னரே மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. மதுபான தொழிற்சாலையில் இருந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள மதுபானங்களை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இந்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மதுபானங்களில் கிருமிகளை அழிக்க பயன்படுத்தப்படும் விஷ இரசாயனம் அடங்கி இருந்ததாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தவறை சரி செய்த பின்னர், மீண்டும் மதுபான தயாரிப்புக்கு அனுமதி வழங்க மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எவ்வாறாயினும் தரமற்ற மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும் மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய கடன் திட்டத்தின் கீழ் சிறுபோக பருவத்திற்கான உரங்களை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் இன்று (01) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்த 20 நாட்களுக்குள் இதனை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் துமிந்த சில்வா இன்று முற்பகல் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று பிற்பகல் வைத்தியசாலைக்கு சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு, துமிந்த சில்வாவை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி, அவரை கைது செய்யுமாறு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட சில தரப்பினர் முன்வைத்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இருந்தாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொது மன்னிப்பை வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை துமிந்த சில்வா விடயத்தில் பின்பற்றப்படவில்லை என மனுதாரர்கள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நாட்டில் சிறுவர்கள் மத்தியில் போசாக்கு குறைபாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 4 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்று அவர் கூறினார்.

அவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவை வழங்கத் தொடங்கியுள்ளார். 

தற்போது வார்டில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 20 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.

பம்பலப்பிட்டி வஜிர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் 20 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் நேற்று (31) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி வீதியில் இருந்து வஜிர வீதியின் ஊடாக டூப்ளிகேஷன் வீதியில் பயணித்த கார் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விசாகா வித்தியாலயத்தை நோக்கி சென்றுள்ளது.

வீதியின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பலவற்றுடன் மோதி முன்னோக்கிச் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த பெற்றோரின் வாகனங்கள் வீதியின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

சுமார் 20 வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தின் பின்னர் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சாரதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட வெளிநாட்டினருக்கான நீண்ட கால வீசா வழங்கும் திட்டத்தை நாட்டிற்குள் அந்நிய செலாவணி வரும் ஒரு வழியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

'கோல்டன் பாரடைஸ் விசா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு ஆன்லைனில் விசா வழங்க முடியும்.

இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை (100000) வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு இலங்கையில் வதிவிட விசா வழங்கப்படும்.

வைப்புச் செய்யும் வெளிநாட்டவர்கள் முதல் வருடத்திற்குப் பிறகு $50,000 திரும்பப் பெறுவதற்கான விருப்பம் உள்ளது, ஆனால் மீதமுள்ள $ 50,000 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக தொடர்புடைய கணக்கில் வைக்கப்பட வேண்டும்.

இங்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும்.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் படி, இலங்கையில் குறைந்தபட்சம் $75,000 அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களை (சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள்) செலவழிக்கும் வெளிநாட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகிக்காத முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் முந்தைய அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்களாக இருந்தவர்கள்.

இவர்கள் அனுராதபுரம் மற்றும் மனுவர மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மேலும் அந்த மாவட்டங்களில்  இளையவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதால் விரக்தியில் உள்ளனர்.

அமைச்சுப் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் பல இடங்களில் பகிரங்கமாக ஜனாதிபதியை குறிவைத்து விமர்சித்து வருவதாக தெரியவருகின்றது.

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம, அட்டலுகம முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கோழிக்கடைக்கு சென்ற போது சந்தேக நபர் ஐஸ் போதைபொருள் குடித்துள்ளதாகவும் சந்தேகநபர் சிறுமிக்கு முன்னதாக கடையை விட்டு வெளியேறி புதருக்கு அருகில் மறைந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுமி  கோழி இறைச்சியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரை கடத்தி அருகிலுள்ள காட்டிற்கு இழுத்துச் சென்று, அவரது உடலைத் தொட்டு வன்புணர்வு செய்ய சந்தேகநபர் முயற்சி செய்துள்ளார். அங்கு கூச்சலிட்டு சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பிக்க சிறுமி  முயன்றுள்ளார். 

பின் சிறுமியின் வாயில் துணியை செருகி, சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் தள்ளி, அதில் மூழ்கி சிறுமியின் முதுகில் மண்டியிட்டு இறக்கும் வரை சந்தேகநபர் இருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம்.  

இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். 

அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 

உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.  

நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும். 

அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd