web log free
July 27, 2024
kumar

kumar

நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் காணப்பட்டதாகவும், தற்போது பயன்படுத்தக்கூடிய வகையில் அந்த தொகை 50 மில்லியன் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அத்துடன், வரி வருமானத்தை எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது பற்றாக்குறையாக காணப்படும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
 
தற்போது இலங்கை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதும் ஆழமானதுமானதென்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
 
இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட அனைவருக்கும் தேசிய பொறுப்பு உள்ளது எனத் தெரிவித்த அவர், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஓரிரு மாதங்களில் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் கடந்த காலங்களில் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டிய காலப்பகுதியில் அரசாங்கம் வரிகளை குறைத்ததாகவும் அதன் பலனை இன்று அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணிகள் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு பங்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு வாரங்கள் வரை விலை திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா IOC (LIOC) ஆகியவற்றின் எரிபொருட்களின் விலைகளை இணையான விலைக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.எனவே, இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் கையளிக்கப்படும் என்றார்.

ஒரு வெளிப்படையான எரிபொருள் விலை திருத்தம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மக்களின் தோள்களில் சுமையை விட்டுவிடாமல் டொலர் சந்தைக்கு ஏற்ப CPC மற்றும் LIOC இரண்டின் விலைகளையும் பாதிக்கும் என்றார்.

சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்பி மக்கள் தவறாக நடக்க வேண்டாம் எனவும், அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு இணங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ஷ குடும்பம் பதவி விலக வேண்டும் என்று இலங்கையில் நடந்த கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் பாதிப்புகள் தொடர்பில் ‘மாற்று கொள்கைக்கான மையம்’ என்ற அமைப்பு இலங்கை முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது.

88 சதவீதம் பேர் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவரோ சமையல் எரிவாயு, எரிபொருள், பால்மா, உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட்டதாக கருத்து தெரிவித்தனர்.

10-ல் 9 பேர் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும், ராஜபக்சே குடும்பம், இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

87 சதவீதம் பேர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இப்படி கருத்து தெரிவித்தவர்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஓட்டுப்போட்ட பெரும்பான்மை சிங்களர்களும் அடங்குவர்.

எனவே, பொருளாதார சிக்கல்களில் இருந்து தங்களை மீட்க ராஜபக்ஷ குடும்பத்தால் முடியாது என்று அனைத்து இனத்தினரும் கருதுவது தெரிய வந்துள்ளது.

 

58 சதவீதம் பேர் நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும், 14 சதவீதம் பேர் சிறிது காலம் ஆகும் என்றும், 2 சதவீதம் பேர் மட்டும், விரைவிலேயே பொருளாதாரம் மீண்டெழும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

 

பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று தெரியாது என்று 26 சதவீதம் பேர் கூறினர். 96 சதவீதம் பேர் எல்லா கட்சி அரசியல்வாதிகளின் சொத்துகளை ஆய்வு செய்து, கணக்கில் காட்டாத சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

4,100 மில்லியனுக்கான ஜின் நில்வால திட்டத்துடன் சீனா CAMC இன்ஜினியரிங் கோ லிமிடெட் ஒப்பந்தம் மிகவும் பிரபலமற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாகும் என அவர் கூறினார்.

சீனா சி.ஏ.எம்.சி இன்ஜினியரிங் கோ லிமிட்டெட் ஹொங்கொங்கில் வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருப்பதாகவும், அது தனித்தனி சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் டொலர்களை ரூட் இன்டர்நேஷனலுக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த நிறுவனம் நடேசனுக்கு சொந்தமானது என்றும், ROOD இன்டர்நேஷனல் நிறுவனம், கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை வங்கிக்கு நிதியை மாற்றியதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அந்தக் கணக்கில் வைப்பு செய்யப்பட்ட பணத்தில் மல்வானையில் உள்ள பிரபல சொத்துக்களை கொள்வனவு செய்ததாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஊழல் பயில்களும் தம்மிடம் உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் அதன் அங்கத்தவர்களாக இருந்தவர்களில் ஊழல் மோசடிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்தும் ஜேவிபியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, கடந்த காலத்தில் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த தருணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த பயில் தம்மிடம் உள்ளதாக கூறியுள்ள அவர், அதில் ஒரு பயிலில் பாரியளவில் எரிபொருள் நிரப்புவதில் இடம்பெற்றுள்ள மில்லியன் கணக்கான மோசடிகள் தொடர்பில் தகவல்கள் உள்ளதாகவும் அதுதொடர்பிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்களை இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.

அதன்படி பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் முதல் பிரதேசசபை உறுப்பினர்கள் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி இன்றைய தினம் குறித்த ஊடக சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் அங்கு பெருமளவான கோப்புகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஒவ்வொரு கோப்பாக அவர் தெளிவுப்படுத்தும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

அனுர இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் கலாச்சார அமைச்சரின் செலவு அறிக்கை முக்கியமானது. 146 செலவு அறிக்கைள்.

நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்த செலவுகளை செய்தாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த இவர்கள் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர்.

பணிப்பாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க இதில் கையெழுத்திடவில்லை. பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார். அகில விராஜ் உட்பட மேலும் சிலர் கையெழுத்திடவில்லை.

இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை எமக்கு நேற்று கிடைத்தது. அதனை சரியாக தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மத்திய கலாச்சார நிதியத்தின் சுமார் மூன்று பில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பாக கோப்பே இது என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

எரிபொருள் போக்குவரத்து பௌசர் உரிமையாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையே இதற்கான காரணம்.

அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், எரிபொருளை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ரயில் மூலம் எரிபொருள் போக்குவரத்து 40 சதவீதமாக விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சதொச ஊடாக மாத்திரம் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை நாட்டின் அனைத்து பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
 
இதற்கமைய ஒரு கிலோகிராம் நாட்டரிசி 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ். விவசாயியான இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்து வந்தார்.

அண்மையில் இவர் பாராளுமன்ற கீழவையின் கூட்டத்தொடரின் போது தனது செல்போனில் 2 முறை ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் பாராளுமன்ற நிலைக்குழு ஆணையரிடம் கூட்டத்தொடரின்போது தான் ஆபாச படம் பார்த்ததை நீல் பாரிஷ் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நீல் பாரிசை கட்சியில் இருந்து நீக்குவதாக கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்தது. தன்மீதான விசாரணை முடியும் வரை எம்.பி. பதவியில் தொடர்வேன் என நீல் பாரிஷ் கூறினார். ஆனால் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “இறுதியில், எனது குடும்பம், தொகுதி மக்கள் ஆகியோர் என்னால் கோபமடைந்திருப்பதையும் காயமடைந்திருப்பதையும் காண முடிந்தது. பதவியில் தொடரத் தகுதியற்றவன் என்பதையும் உணர்ந்தேன்” என்றார்.

65 வயதான நீல் பாரிஷ் பாராளுமன்றத்தில் தான் ஆபாச படம் பார்த்தது குறித்து விளக்குகையில், “ஒரு இணையதளத்தில் டிராக்டர்கள் குறித்து தேடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக தடை செய்யப்பட்ட ஆபாச படத்தை பார்க்க நேர்ந்தது. அதை பார்க்க கூடாதுதான். ஆனால் அந்த நேரத்தில் நான் சற்று தடுமாறி, சிறிது நேரம் அதை பார்த்தேன்” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஆனால் எனது குற்றம், மிகப் பெரிய குற்றம் என்னவென்றால், மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் 2-வது முறையாக அதை பார்த்தேன். அதை வேண்டுமென்றே செய்தேன். அறையின் ஓரத்தில் வாக்களிக்கக் காத்து கொண்டிந்தபோது மீண்டும் ஆபாச படத்தை பார்த்தேன்” என்றார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் “அந்த தருணத்தில் உங்களுக்கு என்ன தோன்றியது?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நீல் பாரிஷ் , “அது ஒரு பைத்தியக்கார தருணம். அந்த தருணத்தில் என்னை நான் பித்து பிடித்தவனாய் உணர்ந்தேன். சுற்றியிருப்பவர்கள் என்னை கவனிப்பார்கள் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. நான் செய்ததை நியாயப்படுத்த போவதில்லை. நான் செய்தது முற்றிலும், முற்றிலும் தவறு. நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

தனக்கும் மேலும் நால்வருக்கும் பிரதமர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தினேஸ் குணவர்தன தனக்கு நெருக்கமான பலருடன் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமக்கு பிரதமர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளதாகவும், மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, ரமேஷ் பத்திரன ஆகியோருக்கும் பிரதமர் பதவி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.