web log free
July 01, 2025
kumar

kumar

சீன ஜனாதிபதி பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும், சீன அரசு இதை உறுதி செய்யவில்லை.

இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முக்கிய நிலைகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் நீக்கப்பட்டு விட்டார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. அதேபோல, சீன மக்கள் பலர் தங்கள் ட்விட்டரில் "அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்ற தகவலைப் பகிர்ந்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிஎல்ஏ அமைப்பின் முழுக் கட்டுப்பாட்டில் ராணுவம் உள்ளதாகவும், சீனாவின் அதிபராக லீ கியாமிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன ராணுவத்தின் வாகனங்கள் கடந்த 22-ம் தேதியே தலைநகர் பெய்ஜிங் நோக்கிச் செல்லத் தொடங்கின என்றும், ஹூவான்லாய் மாகாணத்திலிருந்து, ஹெபே மாகாணத்தின் ஜாங்கியாகோ நகர் வரை 80 கி.மீ. தொலைவுக்கு ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாகவும் கூறப் படுகிறது.

ஜெனிபர் ஜெங் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், "சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அதிபருமான ஜி ஜின்பிங்கை சீன மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதால், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் இந்த வாரம் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன அதிபருக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜி ஜின்பிங்குக்கு எதிராகச் செயல்படுபவர்கள், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை பரப்புவதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட 217 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 அதிதிகள் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தங்கியுள்ள காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானின் புதிய பிரதமர் மற்றும் பல உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

வௌவால்கள் மத்தியில் பரவி, வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய வைரஸ் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Khosta-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், மனித உயிரணுக்களை வேகமாகப் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வைரஸுக்கு மருந்து இல்லை.

கோஸ்டா 2 வைரஸ் ரஷ்யாவில் 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

இருப்பினும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பவில்லை.

'கோவிட்-19' வைரஸ் பரவியதன் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் கோஸ்டா 2 வைரஸ் மீது அதிக கவனம் செலுத்தினர்.

அதன்படி கடந்த சில மாதங்களில் இந்த புதிய வைரஸ் தொடர்பாக அமெரிக்க விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

சவூதி அரேபியாவின் 92வது தேசிய தின கொண்டாட்டம் நேற்று (23) பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரசித்திபெற்ற அதிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விசேட அதிதியாக கலந்து கொண்டமையே இந்த தேசிய தின நிகழ்வின் விசேட அவதானமாகும்.

முஸ்லீம் தீவிரவாதத்த்திற்கு எதிராக கடுமையாகச் செயல்பட்டு, சவுதி அரேபிய அமைப்புகளை பல சந்தர்ப்பங்களில் கடுமையாக விமர்சித்து வந்த ஞானசார தேரரின் வருகை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது சமூக வலைதளங்களை அவதானித்தால் தெளிவாகிறது.

பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளில் இருந்து பல வருடங்களாக விலகியிருந்த அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி விரிவுரையாளர் டிலந்த விதானகேயும் ஞானசார தேரருடன் இணைந்து தனது மனைவியுடன் இந்த தேசிய தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக சவுதி இளவரசர் சல்மான் மிதமான கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில், சவுதி தூதரக துறைகள் பல்வேறு அணுகுமுறைகளுடன் செயல்படுகின்றன என்ற முடிவுக்கு பொதுபல சேனா அமைப்பு வந்துள்ளது.

இதன்படி, ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், சவுதி அரேபிய தூதுவர் அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சர்வதேச ரீதியில் பௌத்த, முஸ்லிம் பிரச்சினைகளை ஆராய்ந்து பௌத்த – முஸ்லிம் நட்புறவை ஏற்படுத்துவதற்கு முன்னின்று செயற்படுமாறு சவூதி அரேபிய இராஜதந்திர திணைக்களங்கள் ஞானசார தேரரைக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி பாராளுமன்ற கட்டடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், புதுக்கடை நீதிமன்ற தொகுதியில் உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையில், கடற்படை தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம் பிரதமர் அலுவலகம், அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இருக்கும் பகுதிகள் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் எழுபத்தேழாவது அமர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நியூயார்க்கில் பல அமைச்சர்கள் அளவிலான கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். 

நேற்று (22) பிற்பகல் உட்கொண்ட மீன் ஒவ்வாமை காரணமாக பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையாக நோய்வாய்ப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாராளுமன்றத்தின் மருத்துவ மையத்தில் இருந்து அடிப்படை சிகிச்சை பெற்ற பின்னர் ஆம்புலன்ஸில் பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டு அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற மருத்துவ மையத்தில் இருந்து உப்பு கூட கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒற்றை இல்லத்தின் உணவகப் பிரிவினால் நேற்று பிற்பகல் வழங்கப்பட்ட மீனை உண்ட இரண்டு அதிகாரிகளும் ஆபத்தான நிலையில் வீழ்ந்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட மீன்கள் கெட்டுப்போனதை அறிந்த உணவக திணைக்களத்தினர் அந்த மீனை அகற்றிவிட்டு மதிய உணவிற்கு செம்மண் மீன்களை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பாராளுமன்றத்தின் சில பகுதிகளுக்கு மதிய உணவு வழங்குவதும் நேற்றைய தினம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஞ்சுள செனரத், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற பொதுச்செயலாளர் நேற்று சிறப்பு விசாரணையை தொடங்கினார்.

நாட்டில் தொடர்ந்தும் போராட்டகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். போராட்டங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து செயற்பட்டனர்.

மோசடிகளுக்கு எதிராக போராட்டங்கள் மூலமே தீர்வுகளை காணமுடியும் என அவர் குறிப்பிட்டார். கசிப்பு விற்பனை செய்தாவது நாடாளுமன்றத்திற்குள் வரும் பலர் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை.

இந்த நிலையில், போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டு நிராயுதபானியான விடுதலை என பெயரிட வேண்டும். அத்துடன், இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

அவ்வாறான நிலையிலேயே நாட்டில் மோசடியற்ற நிலையை கொண்டுவர முடியும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அவசரமாக கொண்டுவரகூடிய விடயமல்ல. அது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது.

எனினும் தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் பாரிய பங்கை கொண்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் ஸ்ரீ லங்கன் எயார் லைன்சில் பணிப்பாளராக இருந்த போது 50 இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்பட்டது.

இதற்கு பினனர் வந்த ஒருவருக்கு 100 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இளைப்பாரிய இராணுவ அதிகாரி ஒருவர் செயற்படு பணிப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவாக செலுத்தப்பட்டது.

நாமல் ராஜபக்சவின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் ஸ்ரீ லங்கன் எயார் லைன்சில் பணிப்பெண்ணாகவும், பணியாற்றி வருமானங்களை திரட்டி வந்தார்.

அதேநேரம், கடந்த 2010 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்சில் மலசலகூடம் ஒன்றை நிர்மாணிக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.

600 கோடி ரூபாய் செலவில் ஒரு மலசலகூடம் நிர்மாணிக்கப்படுமாக இருந்தால் அதில் தங்கத்தினாலான உதிரிப்பாகங்களே பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருந்தார்.

இன்று (23) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பழைய லக்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ஆம் நிலை இயங்காமை, வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தேவை திடீரென அதிகரித்தமை ஆகியவை இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்து வந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர், மினுவாங்கொடை கல்வி வலய திவுலப்பிட்டி கல்விப் பிரிவின் பணிப்பாளர், கொங்கொடமுல்ல புனித அந்தோனியார் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றப்பட்டன.

அத்துடன், மாணவி வாழும் பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டன.

எனினும், இந்தத் தகவல்களின்படி அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை என்று உறுதியாகியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நிலைமைக் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எந்தவொரு குழந்தையோ, நபரோ அல்லது குடும்பமோ உணவு நெருக்கடிக்கு உள்ளானால் இதற்குத் தீர்வு காண விசேட வேலைத்திட்டமொன்று பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் மட்டத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

011 4354647 மற்றும் 011 4354354 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து 5705 / 5707 ஆகிய நீட்டிப்பு இலக்கங்களின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதியான அளவுகோல்களைக் கொண்ட தரப்பினராக 05க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி

பயனாளிகளது குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் நாட்பட்ட நோயாளர்களைக் கொண்ட குடும்பங்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பங்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத குடும்பங்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களைக் கொண்ட குடும்பங்கள், ஆரம்பக் கல்வி கூட பெறாத ஏழைக் குடும்பங்கள், கடுமையான உணவுப் பற்றாக்குறையுள்ள குடும்பங்கள் மற்றும் கடுமையான உணவுப் பஞ்சத்தில் இருக்கும் குடும்பங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாதாந்தம் 15,000 ரூபாவை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்க முடியும். அதற்கமைய முதல் 03 மாதங்களுக்கு பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 06 மாதங்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது தவிர மாதந்தோறும் 10,000 ரூபா வீதம் 6 மாதங்கள் வரை கொடுப்பனவு வழங்க அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் உள்ளடங்காத மற்றும் தற்சமயம் உணவு கிடைக்காமல் தவிக்கும் குடும்பங்கள் இருப்பின் அவர்களுக்கு குறுகிய காலத்தில் உணவு வழங்க வாய்ப்பு உள்ளது. கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் உணவு பாதுகாப்பு திட்டப் பிரிவுக்கு கோரிக்கை முன்வைக்க வேண்டும்.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால், அது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அத்தகைய குடும்பங்களுக்கு அரசாங்கம் செயல்படுத்தி வரும் பெற்றோர் பாதுகாவலர் திட்டங்கள் மூலம் உணவு உதவித் திட்டங்கள் வழங்கப்படும்.

மேலும், உணவின்றி தவிக்கும் குடும்பங்கள் பற்றிய தகவல்களை பாடசாலை ஆசிரியர்களும் சேகரித்து, ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்ப முடியும். அத்தகைய குடும்பங்களுக்கு உதவ விரும்புபவர்களும் இதில் இணைந்து உதவி வழங்க முடியும்.

அதுமட்டுமின்றி கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய முடியும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd