ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் செவி சாய்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு செல்லவிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் யோர்க் வீதி, சத்தம் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பத்தரமுல்ல இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக பல்கலைக்கழக மாணவர் பேரவை தெரிவித்துள்ளது.
இன்றிற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கோரி ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நின்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் நேற்று இரவு 9 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படுவதாக பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக தமக்கு தகவல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி ராஜபக்ச இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவர் தனது குழந்தையுடன் சிங்கப்பூர் வழியாக பிரான்ஸ் சென்றதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் விமான நிலையத்திற்குள் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன இன்று (ஜூலை 08) அறிவித்துள்ளார்.
இதன்படி, நீர்கொழும்பு பொலிஸ் பகுதி, களனி பொலிஸ் பகுதி, நுகேகொட பொலிஸ் பகுதி, கல்கிசை பொலிஸ் பகுதி, கொழும்பு வடக்கு பொலிஸ் பகுதி, கொழும்பு தெற்கு பொலிஸ் பகுதி மற்றும் கொழும்பு மத்திய பொலிஸ் பகுதியில் மறு அறிவிப்பு வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.