web log free
September 14, 2024
kumar

kumar

ஊரடங்கு சட்டம் நாளை காலை 07 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனித்து செயல்பட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். 

நாடு தற்போது உள்ள நிலைமையில் அரசாங்கம் ஒன்று அவசியம் எனவும் அவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் தரப்பிற்கு ஆதரவு வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சஜித் பிரேமதாஸவை பிரதமர் பதவியை ஏற்று ஆட்சி அமைக்குமாறு ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தி வருகின்றார்.

எனினும் சஜித் பிரேமதாச அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால் தனித்து செயல்பட ஹரின் முடிவு செய்துள்ளார். 

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது உள்ளிட்ட அதிகபட்ச சட்டப்பூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காத கும்பல் அல்லது வன்முறைக் குழுக்களால் வாகன சோதனைகள் மற்றும் பொது அல்லது தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்திர தன்மையை உருவாக்கும் நோக்கில் பிரதமர் பதவியை பொறுப்பேற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க இன்னும் ஓரிரு தினங்களில் பிரதமராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு மைத்திரி அணியும் விமல், சம்பிக்க அணியும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் சஜித் அணியின் ஒரு பிரிவு ரணிலுடன் இணையும் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு கோரிக்கையை முன்வைத்த போதும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு பிரதமர் பதவியை பொறுப்பேற்க முடியாது என சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இதனால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்தை கைவிட்டு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் தற்போது விசேட சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி இன்று இரவு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்று தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சூழ்நிலைகளை தீர்க்கும் முகமாக அவருடைய உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் விசேட அறிவிப்பில் தகவல் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இரவு 9 மணிக்கு ஜனாதிபதி விசேட உரை இடம்பெறவுள்ளது. 

 

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். 
 
இதற்கிடையே, பிரதமர் ராஜபக்ஷ குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.
 
இந்த செய்தி உண்மையில்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் பிரதமர் தனது குடும்பத்தினருடன் திருகோணமலையில் உள்ள பில்லோ ஹவுஸ் என்ற பங்களாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது என்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காக பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இங்கு தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசியல் தலைவர்கள் 135 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவின் வீடும் எரிக்கப்பட்டது. மேலும் ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இலங்கையில் வன்முறை வெடித்துள்ளதால் தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஹம்பந்தோட்டை சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

சந்தேகப்படும்படி படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகம் திங்கட்கிழமை (மே 9) முதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது

" அமைதியின்மை தொடங்கியவுடன், எரிபொருள் பவுசர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை நாங்கள் உடனடியாக நிறுத்தினோம். எந்தவொரு எரிபொருள் பவுசரையும் மக்கள் தாக்கினால், சாத்தியமான தீ பரவி குறிப்பிட்ட பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்" எனவும் தெரிவித்தது

எரிபொருள் பவுசர்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பு அங்கீகாரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபை (SLTB), புகையிரத திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதுகாக்கப்பட்ட ஆயுதப்படைகளுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதான பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடபட்டு வருகிறது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் மக்கள் ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களது வதிவடங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மக்களுடைய கோபாவேசம் அரச தரப்பினரது சொத்துக்களை அழித்தொழிப்பதாக மாறி நாடு முழுவதும் தீக்கிரையாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
 
இவ்வாறு இலங்கையில் ஏற்பட்டுள்ள தமக்கு எதிரான எதிர்ப்பலையில் இருந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் எந்நேரமும் நாட்டைவிட்டு வெளியேறிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
திருகோணமலை கடற்படை முகாமில் நாட்டைவிட்டு தப்பிஓடும் நோக்கில் ராஜபக்ச தரப்பினர் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியதை அடுத்து திருகோணமலை கடற்படை முகாமும் மக்களின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது.
 
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
இந்த செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
 
குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் செய்திகள் அவதானித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
 
உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவையாகும்.
 
இவ்வாறான செய்திகளை மறுக்கும் அதேவேளை, வன்மையாக கண்டிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.