கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், அவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவராவார்.
கடந்த மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 22.7% ஆல் குறைந்துள்ளது.
இது 18.5 மில்லியன் கிலோகிராம் தேயிலை என கணிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் தேயிலை உற்பத்தி 17.8% ஆல் குறைந்துள்ளது.
மேலும் மலையக தேயிலை உற்பத்தி 31.6% ஆலும், தாழ்நில தேயிலை உற்பத்தி 16.6% ஆலும் குறைந்துள்ளது.
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பல அறைகளை கழுமோதர போராட்டத்தின் தலைவர்கள் பலர் பலவந்தமாக பயன்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட போராளிகள் போராட்டம் ஆரம்பமானது முதல் அந்த விடுதிகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்திய பின்னர் போராட்டக்காரர்கள் அங்குள்ள இணைய சமிக்ஞைகளை பயன்படுத்தி இணையத்தில் அழைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சேதப்படுத்திய நூற்றுக்கும் மேற்பட்டோரின் கைரேகைகள் எடுக்கப்பட்டு அவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர். மனோ கணேசன் அல்ல, நான் விலகினால்கூட கூட்டணி பலமாகப் பயணிக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து கூட்டணி மட்டத்தில் மனோ கணேசன் கலந்துரையாடவில்லை. சிலவேளை, வயதாகிவிட்டதால் அவர் அந்த முடிவை எடுத்திருக்கக்கூடும்.
யார் விலகினாலும் தமிழ் முற்போக்கு கூட்டணி பலமாக பயணிக்கும். இந்த கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர்"என கூறியுள்ளார்.
கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவகம் அமைந்துள்ள காணியையும் கட்டிடத்தையும் முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு ஊடக அமைச்சிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் தொகுதிக்காக இந்த காணிகளை வழங்குவதற்கான யோசனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
லேக்ஹவுஸ் ஊழியர்களின் சம்பளம் மற்றும் கடனை வழங்குவதில் உள்ள பிரச்சினையையும் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காணி விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் கொழும்பு நகரில் வேறு இடத்தில் லேக்ஹவுஸ் நிறுவகத்தை ஆரம்பிக்க அல்லது நிறுவனங்களை கலைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் 30 அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர் பதவிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு சமகி ஜனபலவேகயவின் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கவுள்ளதுடன் சிறு கட்சி தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சர்களின் சம்பளத்தை வழங்காமல், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.
QR அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆகஸ்ட் முதல் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன எண்ணின் கடைசி இலக்கத்துடன் தொடர்புடைய தேதியில் எரிபொருளை வழங்கும் முறை அன்றிலிருந்து ரத்து செய்யப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் கூறுகிறது.
இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மலையகத் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.
அதற்காக மலையக அபிலாஷை ஆவணத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
எனவே, கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி, அப்பணியை செய்ய எதிர்பார்க்கின்றேன்.
கூட்டணியில் தகுதியானவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தலைவராவார். மலையக அபிலாஷை ஆவணம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று காலை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
நேற்று (28) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் முடிவடையும் வகையில் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் ஒகஸ்ட் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்றத்தின் 3வது அமர்வில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளார்
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னர் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள பொல்துவ சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.