web log free
July 27, 2024
kumar

kumar

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த சமூக ஊடகங்களுக்கான தடை சற்று நேரத்திற்கு முன்னர் நீக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களை அரசாங்கம் முடக்கியதால் அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சர்வதேச அளவிலும் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டன.

சமூக வலைத்தளங்களை தடை செய்தமை மனித உரிமைகள் மீறல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்து இருந்தது.

நிலையில் சமூக வலைத்தளங்களுக்கான தடையை அரசாங்கம் சற்று முன்னர் நீக்கியுள்ளது.

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை கூடியபோது இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி தீர்மானத்தை நிராகரித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

துணை சபாநாயகரின் முடிவை ஒவ்வொரு பாகிஸ்தானும் வரவேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வெளிநாட்டு சதியாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே.பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும்.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

பாகிஸ்தானை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.

மேலும், இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் பரூக் ஹபீப் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தும் பேரணி மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  

 

குடியுரிமைக்கான அரசியலமைப்பு உரிமையில் தலையிடாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு பிரஜைகளின் அரசியலமைப்பு உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புக்கள் இருந்தாலும், போராட்டக்காரர்களும் வன்முறையில் ஈடுபடாமல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் அமைதியாகப் போராட வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஊடகவியலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து ஊடக சுதந்திரத்தை குழிபறிக்கும் வகையிலான தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓஷத சேனாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் அவரது இராஜனாமாவிற்கான காரணம் வெளியாகவில்லை. அதேசமயம் நேற்றிரவு முதல் நாட்டில் சமுக்க ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் நிலைமை குறித்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு சபையை கூட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மிரிஹான பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முழுமையான அறிக்கையை பாதுகாப்புப் படையினரிடம் சமர்ப்பித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே, நாட்டின் நிலைமை குறித்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு சபையை கூட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகநூல் மூலம் மிரிஹானவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், துனிசியா, ருமேனியா மற்றும் தாய்லாந்தில் நடந்த போராட்டங்கள் போல சில இடங்களில் இருந்தமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள் நேற்று நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வட்ஸ்அப், டுவிட்டர் போன்றவற்றை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு பூராகவும் இன்று பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் இந்த முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் அவர் இன்னும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதனால் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நிதியமைச்சர் ஏப்ரல் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்வதற்கு முன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது அவர் சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தமது கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதரவாளர்களை எதிர்கொள்ள முடியாமல் கிராமத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களால் தாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், புத்தாண்டு காலத்தில் வெளிநாடுகளில் உள்ள தமது பிள்ளைகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களை சந்திக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் தற்போது வெளிநாடு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது வெளிநாடு சென்றால், அவர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விளம்பரப்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும்.

அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது கொழும்பில் உள்ள தமது தனிப்பட்ட இல்லங்கள் அல்லது உத்தியோகபூர்வ இல்லங்கள் இருந்து வருத்தமடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைப்பதை கருத்திற்கொண்டு மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை இன்று (03) முதல் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (02) மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி அறிவுறுத்தியுள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை குறைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய இன்று (03) முதல் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி பிரதமரிடம் நம்பிக்கை வெளியிட்டார்.