web log free
December 22, 2024
kumar

kumar

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தலைநகர் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில், இன்று ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
 
இவ்வாறு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
 
யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
 
பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த பழுப்பு நிற துப்பாக்கியும், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எச்.பி.சேமசிங்கவின் வீட்டில் இருந்த 60 பவுண் தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் விமான நிலைய வீதியிலுள்ள துமிந்த திசாநாயக்க மற்றும் எச்.பி.சேமசிங்க ஆகியோரின் இரு வீடுகள் கடந்த 9ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டதுடன் அவர்களது சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது துமிந்த திஸாநாயக்கவிற்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பிரவுனிங் துப்பாக்கி அவரது வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் எச்.பி.சேமசிங்கவின் வீட்டை சேதப்படுத்த வந்த நபர்கள் வீட்டின் அலமாரியில் இருந்த 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.சும்மா இந்த வன்முறைகளைப் பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இவர்கள் வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபையில் இன்று ஆளும் கட்சி எம்பிகளின் மீது கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே சிங்கள மொழியில் ஆவேசமாக இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்பட்டார்கள். கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள்.

இன்று ஆளும் அணி அமைச்சர்களின் வீடு, சொத்துகளை எரித்து கொலை செய்த இந்த வன்முறை, அமரகீர்த்தி என்ற அப்பாவி எம்பியை அடித்தே கொலை செய்த வன்முறைகள், இந்த யுத்தம் மற்றும் 1983, 1977, 1958 இனக்கலவரங்களிலேயே ஆரம்பித்தது. இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்குப் புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டைக் கொளுத்தினார்கள்.

எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தைக் கொளுத்தினார்கள். ஒரு கம்பீரமான திரைப்பட கலைஞரான என் தந்தை அதன்பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்து போனார். இதோ இந்த ஆசனத்தில்தான் என் நண்பன் ரவிராஜ் அமர்ந்திருந்தார்.

இன்றுள்ள டிஎன்ஏ எம்பிக்கள் புதியவர்கள். அவர்களுக்கு அவரை தெரியாது. ஆனால் எனக்கு நன்கு தெரியும். கொழும்பில் வாழ்ந்த நாம் இருவரும் 2001ஆம் ஆண்டிலிருந்தே நல்ல நண்பர்கள்.

சிங்கள மக்களுக்குத் தமிழர் பிரச்சினையைச் சிங்களத்தில் சொல்ல முயன்றதற்காக ரவிராஜ் கொல்லப்பட்டார். அன்று நானும், ரவியும் சேர்ந்து பலவந்த கடத்தல், சட்ட விரோத படுகொலைகள், வெள்ளை வேன் கலாச்சாரத்துக்கு எதிராகப் போராடினோம்.

என்னையும், ராகமை, களுத்துறை, தெமட்டகொடை ஆகிய மூன்று இடங்களில் கொல்ல முயன்றார்கள். இந்த வன்முறை ஆட்டம்தான் இன்றும் தொடர்கிறது. முதல் அரசியல் கொலையை, 1959இல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார். அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள்.

இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பிக் கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம். நாம் ஆமதுருமார்களை பன்சலைக்கும், குருக்கள்மார்களை கோவிலுக்கும், இமாம்களை பள்ளிவாசல்களுக்கும், பாதிரிகளைத் தேவாலயங்களுக்கும் போகச் சொல்வோம். இவர்கள் இங்கே வேண்டாம். அரசியலில் வேண்டாம்.

இந்த சபையில் ஒரு ஆமதுரு மந்திரி இன்று இருக்கிறார். அவரே இங்கு வந்த கடைசி மந்திரியாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். இந்நாட்டின் இன்றைய சீரழிவுக்கு இவர்கள்தான் காரணம். எவருக்கும் இவர்களது அறிவுரை வேண்டுமென்றால், அவர்களது மத ஸ்தலங்களுக்குப் போய் கேட்கலாம். இங்கே வேண்டாம். கடந்த தேர்தலின் போது ஒரு கேலிக்கூத்து நடந்தது.

களனி விகாரை ஆமதுரு சொன்னார். களனி கங்கை ஆறு இரண்டாகப் பிளந்ததாம். 'டோம்' என சத்தம் வந்ததாம். பாதாளத்திலிருந்து நாகராஜன் வந்தாராம். 'நாட்டை காக்க ஒரு மன்னன் வருகிறான்' என ஒரு அசரீரி கேட்டதாம். என்ன ஒரு கேலிக்கூத்து இது! இப்படி வெட்கமில்லாமல் சொன்ன அந்த ஆமதுரு இன்று களனி பல்கலைக்கழக உப வேந்தராம். வெட்கம்..!

சும்மா இந்த வன்முறைகளைப் பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். எங்கள் குருக்கள், இமாம்கள், மாதிரிகள் ஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்குப் போக வேண்டும். நாடு உருப்படும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தரவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் பிரதிகளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கோளாறினை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்புக்குப் பிறகு இது மீண்டும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான அறிவிப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 09 ஆம் திகதி காலிமுகத்திடலில் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.

இலங்கைத் தமிழர்களுக்கு தூத்துக்குடி யாசகர் இந்திய ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறை சேர்ந்தவர் பாண்டி (65). யாசகரான இவர் கொரோனா நிவாரண உதவியாக 10 ஆயிரம் வீதம் பல முறை நிதி உதவி வழங்கியுள்ளார். இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் விசாகனிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘நான் பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பணியாற்றினேன். அப்போது அங்கு பல சமூக சேவைகள் செய்துள்ளேன்.

2 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டுள்ளேன். இச்சூழ்நிலையில் மீண்டும் தமிழகம் வந்து யாசகம் செய்து, அதில் கிடைத்த பணத்தை 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கி உள்ளேன். மேலும் கொரோனா நிதி உதவியை மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட கலெக்டர்களிடம் வழங்கி உள்ளேன். தற்போது திண்டுக்கல் கலெக்டர் விசாகனிடம் இலங்கை தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளேன்’’ என்றார்.

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அஜித் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு ஆதரவாக 78 வாக்குகளும் கிடைத்துள்ளதுடன், 23 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று(17) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது.

இதன்போது குறித்த இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹினி கவிரத்ன மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் அஜித் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியது.

நாட்டின் மேல், சப்ரகமுவ, வட மேல், மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று(17) 100 மில்லி மீட்டர் வரையான மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனைத்தவிர, வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நாட்டில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று (17) சபாநாயகர் தலைமையில் கூடுகிறது.

புதிய பிரதமராக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலரும் நியமிக்கப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற ஆசனங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதேவேளை பிரதி சபாநாயகர் தெரிவும் இன்று (17) இடம்பெற உள்ளதோடு, பிரதி சபாநாயகருக்காக ஆளுங்கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்‌ஷ எம்.பியின் பெயரும், எதிர்க்கட்சியின் சார்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினராக ரோஹினி கவிரத்னவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகரின் தெரிவுக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தக்கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது.

நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு அமையும் பட்சத்தில் மாத்திரமே நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்பட்டு ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அமைச்சர் பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் சமகி ஜன பலவேகய அமைச்சர் பதவிகளை ஏற்க வேண்டும் என தாம் நம்புவதாகவும் இது குறித்து கட்சி முடிவு எடுக்கும் வரை இன்னும் ஒரு நாள் பொறுத்திருப்பேன்" எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்: ஹரின் பெர்னாண்டோ

"சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த தருணத்தில் நாம் அரசியலைப் பற்றி சிந்திக்காமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இன்னும் ஆறு மாதங்களில் எமக்கு ஒரு நாடு இருக்காது, இந்த நெருக்கடியை தீர்க்க இந்த புதிய அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவும் , அனுரகுமார திஸாநாயக்கவும் இணைவதை தான் விரும்புவதாகவும்”அவர் தெரிவித்துள்ளார்.

"Gota Go Home போராட்டத்தின் கோரிக்கையை உள்ளடக்கிய ஏழு அம்சங்களுடன் நாங்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம், நேர்மறையான பதில் கிடைத்தவுடன் நாங்கள் ஒரு முடிவை எடுப்போம், இதில் நான் தனியாக இல்லை" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd