web log free
July 27, 2024
kumar

kumar

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதால் மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசுத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற நேரடிப் பேச்சுகள் நம்பிக்கையைக் கட்டி வளர்த்து, நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதத்தில் அமைந்தமையை அறிந்துகொண்டு, அது தொடர்பில் முழுத் திருப்தியும் வரவேற்பும் வெளியிட்டிருக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்.

கொழும்பு வந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று மாலை 4.30 மணி முதல் கொழும்பு இந்திய ஹவுஸில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றினர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கொழும்புக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் தூதரக அதிகாரிகள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசுக் குழுவினருடன் தாம் நடத்திய பேச்சுகள் குறித்து சம்பந்தனும் சுமந்திரனும் முதலில் விளக்கினர். அவற்றைச் செவிமடுத்த ஜெய்சங்கர், அதன்பின்னர் அந்தப் பேச்சுத் தொடர்பில் இந்தியாவின் முழுத் திருப்தியையும் வரவேற்பையும் வெளியிட்டார்.

"ஜனாதிபதி கோட்டாபயவுடனான சந்திப்பின்போதும் அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாங்கள் நடத்திய பேச்சுக்களை விவரித்தார். இப்போது நீங்கள் சொன்ன, அதே தகவல்களை அவரும் சொன்னார். என்னுடைய அனுபவத்தில் இப்படியான பேச்சுத் தொடர்பில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுமே ஒரே விதமாகக் கருத்து வெளியிடுவது இதுவே முதல் சந்தர்ப்பம். ஆகையால் இந்தப் பேச்சுகள் இரு தரப்பு நம்பிக்கையைக் கட்டி வளர்த்து நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என நான் நம்புகிறேன்" - என்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக் குறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்றிரவு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:-

"இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தமது இலங்கை விஜயத்தின்போது இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மார்ச் 25ஆம் திகதி இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு மற்றும் அதையொட்டிய பிந்திய நிகழ்வுகளை வெளிவிவகார அமைச்சருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கியது.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பயன்பாடு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், புலம்பெயர்ந்தோர் முதலீடு போன்ற விடயங்கள் பேசப்பட்டன எனக் கூட்டமைப்பினர் தெரியப்படுத்தினர்.

இதற்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதியை வெளிவிவகார அமைச்சர் சந்தித்தபோதும் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான ஊடாட்டம், தொடர்பாடல்கள் பற்றிய விடயங்கள் பேசப்பட்டன. 

இலங்கை வெளிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை இந்திய வெளிவிகார அமைச்சர் சந்தித்தபோதும் இது தொடர்பில் மேலதிக புரிதலுக்கான விடயங்களும் விவரிக்கப்பட்டிருந்தன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தன்னுடைய பங்குக்கு, அரசு - கூட்டமைப்புப் பேச்சில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சாதகமான அம்சங்களை வரவேற்றுக் கருத்து வெளியிட்டார்.

ஐக்கிய இலங்கையின் கட்டமைப்புக்குள் சமத்துவம், நீதி, சமாதானம், கெளரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவு செய்யப்படுவதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது என்ற இந்திய அரசின் நிலைப்பாட்டை அவர் மீள உறுதிப்படுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதார மீளெழுச்சிக்கு இந்தியா வழங்கும் அபிவிருத்திப் பங்களிப்பும் வெளிவிவகார அமைச்சர் பங்குபற்றிய எல்லாக் கூட்டங்களிலும் மெச்சி வலியுறுத்தப்பட்டன.

இலங்கையின் பிரதமருடன் இணைந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தமையில் தமது விசேட திருப்தியை வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டார்.

அவர் இலங்கையின் கடற்றொழில் மற்றும் உயிரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் தனியாகச் சந்தித்து மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்" - என்றுள்ளது.

தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாக இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், தேசிய அரசாங்க நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது கூறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் அளவுக்கு தமது கட்சியில் எவருக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தாம் நினைக்கவில்லை என அமைச்சர் ரோஹித அபேவர்தன குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரால் எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்பட்டாலும்  இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதுவரை எவராலும் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாவின் அரசாங்கத்தை தோற்கடிக்க போதுமான ஆதரவு இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இன்று(28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

அவரது வருகைக்காகவும் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டமைக்காகவும் ஜனாதிபதி இதன்போது இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நாளை 29ம் திகதி ஏழரை மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குழு A முதல் L வரை - 7 மணி 30 நிமிடங்கள், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணி நேரம்.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணி 30 நிமிடங்கள். குழு P முதல் W வரை - 7 மணி 15 நிமிடங்கள்,

காலை 8.30 முதல் மாலை 6.30 வரை ஐந்து மணி நேரம். மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணி 15 நிமிடங்கள்.   

எதிர்காலத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் அரசியல் மாற்றமொன்றை மேற்கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அரசியல் மாற்றமொன்றை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலேயே இவ்வாறானதொரு மாற்றம் இடம்பெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

நாட்டிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 130 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால்(INTERPOL) சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துபாயிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர்களது சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கடந்த வருடத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 95,000 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது 1,630 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

வைத்தியசாலை அமைப்பிற்கு முன்னுரிமை வழங்கி தொடர்ச்சியாக வைத்தியசாலைகளுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மேற்கொண்ட கலந்துரையாடலில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார்.

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமன்புர பிரதேசத்தில் கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்
 
சீனக்குடா இரகசியப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து  (26) காலை குறித்த வீட்டை சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரம் இன்றி வைத்திருந்த கட்டுதுவக்கு ஒன்றும் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா போலீசார் தெரிவித்தனர்
 
இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து 33 வயதுடைய பெண்ணொருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண் வழங்கிய வாக்குமூலத்திற்க்கு அமைய கைப்பற்றப்பட்ட கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் தனது தந்தையுடையது எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 
மேலும் குறித்த பெண்ணின் தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும் வேலை நிமிர்த்தம் கொழும்புக்குச் சென்று இருந்ததாகவும் குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்
 
இவ்வாறிருக்கையில் குறித்த பெண்ணின் தந்தையை சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீன போலீசார் தெரிவித்தனர்
 
மேலும் தம்வசம் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண்ணை  நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.