web log free
December 22, 2024
kumar

kumar

தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானம் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான காரணங்களை வெளிப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 9ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார். இதனையடுத்து நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைக்கு மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் பதவியை இராஜினாமா செய்து மகிந்தராஜபக்ச வெளியேறியதை தொடர்ந்து பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படகு மூலம் மலேசியாவிற்கு தப்பிச் சென்றுள்ள பிள்ளையான் அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயற்சி செய்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் அவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பிள்ளையான் மீது கொலை வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் புதிய பிரதமர் இந்திய பிரதமரை சந்தித்து இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாளை (13) பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் 14 ஆம் திகதி (2022-05-14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.


புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வு பெற்ற அதிகாரியாவார்.

2015-2019 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மூன்று தடவைகள் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏகநாயக்க, இம்முறை நான்காவது முறையாக பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

ஏகநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளில் 30 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய இவர், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்திலும் சேவையாற்றியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வௌியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.

நாட்டின் நெருக்கடிகளைத் தீர்க்கும் என ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்ஸவும் நம்பும் தீர்வை நாட்டில் உள்ள எவராலும் நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ ​​முடியாது என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

“கோட்டாபயவை ரணில் நம்புவதும், ரணிலை கோட்டாபய நம்புவதும் தான் நடக்கும். அவர்கள் செய்வதை நாட்டின் குடிமக்கள் எவரும் நம்பமாட்டார்கள்” என அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களின் ஆணைக்கு செவிசாய்க்காமல் தீர்மானங்களை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

”ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஸக்களின் பாதுகாவலர், அவர் அவர்களின் பாதுகாப்பிற்காக அதிகாரத்தைப் பெறுகிறார். அதே சமயம் ராஜபக்ஸக்கள் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாவலர்கள். அதைத்தான் கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம்,” என்று அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைகளுக்கு யார் செவிசாய்க்கிறார்கள் என்பதில் தான் நெருக்கடிக்கு தீர்வு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

சூழ்ச்சிக்காரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தீர்மானங்களே எட்டப்பட்டுள்ளதாகவும் மாளிகைகளில் நடைபெறும் சதிகளின் மூலமாக மக்களின் உண்மையான எதிர்பார்ப்பும் அபிப்பிராயங்களும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கலாநிதி ஓமல்பே சோபித்த தேரருடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற ​சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (12) தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படும் விடயத்திற்கு ​கொழும்பு பேராயர் கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிருப்தி வௌியிட்டார்.விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே, அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இந்த நியமனம் சட்டப்பூர்வமானது அல்ல, தற்போது இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் தீர்வு இதுவல்ல

என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

அரசியலில் தோற்கடிக்கப்பட்ட, மக்களால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு நபரை அல்ல, மரியாதைக்குரிய நேர்மையான நபரையே மக்கள் விரும்புகிறார்கள் எனவும் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அனைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒரு நபரையே மக்கள் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மகாநாயக்க தேரர்கள் கட்சி சார்பற்ற நபரை பரிந்துரைக்கின்றனர். அந்த பரிந்துரைக்கு என்னவானது என்பது அனைவரின் யூகமாக உள்ளது. தற்போதைய நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், இந்த அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை. அது தற்போதைய பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் மூலம் நடக்க முடியாது. இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு பக்கசார்பற்ற நபரால் மட்டுமே அது நிகழ முடியும்

என்றும் மால்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்து செய்ய வேண்டும் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். கலாநிதி ஓமல்பே சோபித்த தேரருடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற ​சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவின் மூலம் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துள்ளார்.

”நெருக்கடியான தருணத்தில் பயணத்தை தொடரும் உங்களுக்கு வாழ்த்துகள்,” என முன்னார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் 1993 – 1994 வரை அவர் முதலில் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2004 வரை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனவரி 2015 இல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தலில் அவர் கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனம் ஆகஸ்ட் 2015 பொதுத்தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.

2018 ஒக்டோபரில் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிய அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு, மிண்டும் 2018 டிசம்பரில் அவரை பிரதமராக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நவம்பர் 2019 இல், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று(12) காலை 07 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ எனும் பெயரில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்றதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொதுநிர்வாக அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பும் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd