முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 12, புதுக்கடை வீதியைச் சேர்ந்த சட்டத்தரணி சேனக பெரேராவினால் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த மனு இன்று (13) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமொன்றை அமைக்கமாட்டார் எனவும் , தேசத்தைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
“அனைத்து கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்து மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் என நம்புகிறோம். இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் அந்நிய கையிருப்பு வரலாற்றில் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றுள்ளது, அதேவேளையில் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி மக்கள் தவிக்கின்றனர். இந்த நெருக்கடியைத் தீர்த்து, மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியது இன்றியமையாதது” என்று ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ராஜபக்சக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் குறித்து சில வெளிநாடுகளும் நன்கொடை நிறுவனங்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளதால் அவர்கள் இலங்கைக்கு உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .
நாளை 14 ஆம் திகதி 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை மறுதினம் (15) வெசாக் பூரணையை முன்னிட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
காலிமுகத்திடலுக்கு முன்பாகவும், அலரிமாளிகைக்கு முன்பாகவும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று தனிநபர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 136 (1) (a) இன் கீழ் சட்டத்தரணி சேனக பெரேராவால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சாமர ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த மனு இன்று (13) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்படி, இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 140, 144, 146, 149, 150, 154, 157, 314, 315, 316, 343, 483, 486 ஆகிய பிரிவுகளின்படி சட்டவிரோதக் கூட்டத்தை நடத்துவதும் அதன் அங்கத்துவத்தை வைத்திருப்பதும் கலவரம் , பொது ஊழியரைத் தாக்குதல் மற்றும் இடையூறு செய்தல், பொதுமக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தைத் தூண்டுதல், கலவரத்தைத் தூண்டுதல், வேண்டுமென்றே கடுமையான உடல் காயம் செய்தல், கிரிமினல் வற்புறுத்தல், சித்திரவதை மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய குற்றங்கள் செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பு வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும், குற்றவியல் சட்டத்தை மீறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு பிடியாணை அல்லது அழைப்பாணை பிறப்பிக்குமாறும் மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
இன்றைய தினம் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 343.79 புள்ளிகளாலும், S&P SL 20 - 139.56 புள்ளிகளாலும் அதிகரித்துள்ளது. இது 5.52% வளர்ச்சியாகும்.
அத்துடன், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் சுமார் 2.18 பில்லியன் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்ற மறுநாள் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அலரி மாளிகைக்கு முன்பாக 'No Deal Gama நோ டீல் கம' எனும் பெயரில் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மைனா கோ கம என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ததை அடுத்து கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆட்சிக்கு வரும் அனைவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தமக்கில்லை எனவும், எந்தவொரு தலைவர் பதவியேற்றாலும், அவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்துவதற்கே இந்த ஆர்ப்பாட்டக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காலத்தின் போது தமது நலன்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபடுவதாகவும் மக்கள் நலன் குறித்து அவர்கள் கரிசனை கொள்வதில்லை எனவும் அவர் கூறினார்.
இரண்டு நாட்களில் உணவையும் எரிபொருளையும் வழங்கி தமது குறிக்கோளை திசை திருப்ப முடியாது எனவும், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்தார்.
நெருக்கடியை தீர்ப்பதற்காக வௌிநாடுகளிலிருந்து கடன்களை தொடர்ந்தும் பெறுவது எதிர்கால சந்ததியினரை பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நிரந்தர தீர்வொன்றை எட்டுவதிலேயே பதவிக்கு வரும் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தும் வகையில் ‘No-Deal-Gama’ போராட்டக்களத்தை ஸ்தாபித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையின் 26 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க ஆறாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்படி, இந்த நாட்டின் பிரதமராக அதிக முறை பதவி வகித்த அரசியல்வாதியும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சித் தலைவரும், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட அரசியல் கட்சித் தலைவரும் பிரதமராக பதவியேற்கவுள்ளமை விசேட அம்சமாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாப்பிற்காகவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (12) மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பீப்பாய் ப்ரெண்ட் மசகு எண்ணெயின் விலை 108 டொலர் 8 சதமாக உயர்ந்தது, WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலர் 30 சதமாக இருந்தது.