web log free
May 19, 2024
kumar

kumar

பண்டிகை காலத்தில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

தற்போது வரையில் நாளாந்தம் சுமார் 1,200 கொரோனா நோயாளர்களின் பதிவாகி வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, வௌிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தில் நாளை(01) முதல் புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

உக்ரைன் மீது ரஷிய படைகள் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.

ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது. உக்ரைன் மீது ரஷியா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரசில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இத்தனை வருடங்களாக சிலர் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் முடித்துக் காண்பித்துள்ளோம் என்று தெரிவித்த என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதே நேரம் இன்று பலர் தரமற்ற விமர்சனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் அதனால் நான் வளர்வேனே தவிர ஒரு போதும் எவரும் என்னை வீழத்த முடியாது என தெரிவித்தார்.

அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் குறுக்கு வீதியை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“மலையகத்தில் இன்று பலர் பல்வேறு அர்த்தமற்ற விமர்சனங்களை செய்து வருகிறார்கள். ஏதோ பேச வேண்டும் என்பதற்காக செய்யப்படும் விமர்சனங்களுக்கு என்னால் பதிலளித்துக்கொண்டு இருக்க முடியாது.

ஆரம்பத்தில் ஒரு கூட்டம் கூறியது எமது மக்களுக்கு கோதுமை மா தேவையில்லை என்றும் கோதுமை மா வினை வைத்து அரசியல் செய்கின்றோம் என்றும் கூறினார்கள். அதனை தொடர்ந்து விலையினை குறைத்துக் கொடுத்தவுடன் அது தாமதம் என்றார்கள் ஆகவே தரமற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.

30 வருட போரினை கடந்து நாம் திரும்பி மீண்டு வந்துள்ளோம். ஆகவே இந்த கொரோனா பாதிப்பில் இருந்தும் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறான தொற்றுக்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படும் போது மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

நுவரெலியாவைப் பொறுத்த வரையில் மக்கள் பொறுயாகத்தான் இருந்தார்கள் அதற்கு நான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆகவே ஏனைய மாவட்டங்களை போன்று வீதி அபிவிருத்திகள் நடந்தால் நாளை பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். கடந்த காலங்களில் இந்த வீதியில் மக்கள் செல்ல முடியாத நிலையே காணப்பட்டன.

எத்தனையோ கர்பிணித்தாய்மார்கள் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள். ஆகவே தான் இந்த வீதியினை அபிவிருத்தி செய்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் மேலும் பல்வேறு அபிவிருத்திகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

கடந்த 26ஆம் திகதி படதொட்ட பிரதேசத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி குருவிட்ட பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த மரணம் சந்தேகத்திற்குரியது என குறித்த பெண் குருவிட்ட பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குருவிட்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இந்த மரணம் கொலை என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் குருவிட்ட, படதொட்ட பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரின் 22 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து அவர்கள் விசைப்படகைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இது குறித்துப் பல முறை அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை அரசுடைமையாக்கப்பட்டு அவற்றை இலங்கை அரசு ஏலம் விட்டு வருகிறது.

நேற்று முன் தினம் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வ்ந்ததாக கூறி தங்கச்சி மடத்தை சேர்ந்த ரமேஷ் என்பவின் விசைப்படகைப் பறிமுதல் செய்தனர்

அந்த படகில் இருந்த ரமேஷ் (40),ரோடிக்(18), அஜித்(19), கொலம்பஸ்(52), இமான்(22), லின்சன்(23), பவுத்தி(19), இஸ்ரேல் (20) ஆகிய 8 மீனவர்களைக் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 26 நாட்களில் தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 80 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமை பிரதிநிதிகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இலங்கை தொடர்பிலான விசாரணைகளை இனியும் தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற, அத்துமீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக ஐ.நா-வின் விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கூட கருத முடியாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மக்கள் பேரணியையும் கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட மேலும் வல விடயங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் ஏசியன் மிரருக்கு தெரிவித்தனர்.

பல நாட்களுக்குப் பின்னர் இன்று (27) பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவை விநியோகிக்க முடியாதுள்ளதாக எரிவாயு நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தேவைக்கு ஏற்ற எரிவாயுவை நிறுவனம் வழங்குவதில்லை என்றும் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4300-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

ரஷிய ராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர ரஷிய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

இதேபோல் ரஷிய பாதுகாப்புத்துறை கூறியிருக்கும் தகவலில், 223 பீரங்கிகள் மற்றும் ராணுவ வாகனங்கள், 28 போர் விமானங்கள், 39 ராக்கெட் லாஞ்சர்கள், 86 சிறிய ரக பீரங்கி மற்றும் மோர்ட்டார்கள், 143 சிறப்பு ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாக கூறி உள்ளது.

 

நாளை தினம் (28) மின் விநியோகம் எவ்வாறு துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

அதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய மண்டலங்களில் நாளை ஐந்து மணி நேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு நான்கு மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.