இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, கொரிய குடியரசின் ஒருங்கிணைப்பு அமைச்சர் Koo Yun cheol, கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் கொரிய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபயவிடம் தெரிவித்தார்.
மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாளைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
மார்ச் 31 அன்று ஜனாதிபதி கோட்டாபயவுடனான அழைப்பின் போது, அமைச்சர் KOO Yun-cheol இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 45 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது அதை எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் இரு நாடுகளும் தங்களின் வலுவான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என அவர் தெரிவித்தார் .
மேலும் கொரிய தொழில் முயற்சியாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதாகவும் கொரியாவின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உள்ளூர் மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் அமைச்சர் KOO Yun cheol விரும்புவதாகவும் தெரிவித்தார் .
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்து கவர்ஸ் கோபரேட் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு ஏதேனும் கோரிக்கை விடுத்தால் அதனை அன்றைய தினம் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மின்வெட்டுகளின் போது புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் வாகன சாரதிகளையும் பாதசாரிகளையும் எச்சரித்துள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்தார்.
பெரும்பாலான ரயில் கடவைகள் மின்சாரத்தால் இயக்கப்படும் "பெல் மற்றும் லைட்" பொருத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மின் தடையின் போது அந்த ரயில் கேட்கள் பேட்டரியில் இயங்கும். ஆனால் நீண்ட நேர மின்வெட்டு காரணமாக பேட்டரி திறன் குறைவடைந்துவிடும் , எனவே, பெல் மற்றும் லைட் அமைப்புகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம் எனவும் சாரதிகளையும் பாதசாரிகளையும் கவனமாக நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுள்ளது .
எனவே மின்வெட்டு ஏற்படும் போது புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக செனவிரத்ன தெரிவித்தார்.
வெற்றிடமாகவுள்ள நிதியமைச்சர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் வினவிய போது, மீண்டும் பதவி ஏற்க தயாராக இல்லை என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் எனவும் அவர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மீளப் பெறப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பிறப்பித்த அவசர நிலை பிரகடனத்தை ஏப்ரல் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கையின் நீதி அமைச்சராக இருந்து நேற்றையதினம் நிதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட அலி சப்ரி இன்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நிதி அமைச்சில் பொறுப்புகளை ஏற்பதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியின் 40க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைக் குழுவாக நாடாளுமன்றத்தில் செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 12 ஆளும் கட்சி எம்பிக்களும் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேச்சைக் குழுவாகச் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தீர்மானங்களை அறிவித்துள்ளனர்.
இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை குழுவாக செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று காலை ஊடகங்களுக்கு அறிவித்தது.
113 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை வெளிப்படுத்தும் எந்தவொரு குழுவிற்கும் ஆட்சி அமைக்க அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்காக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலகுமாறு கோரி நாடு முழுவதும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சற்று முன்னர் விலகியுள்ளது.
அரசாங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு வழங்கிய இராஜாங்க அமைச்சுப் பதவியை ஜீவன் தொண்டமான் சற்று நேரத்திற்கு முன்னர் ராஜினாமா செய்துள்ளார்.
தொண்டைமான் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது 1000 ரூபா சம்பள விடயம் மற்றும் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது.
அதன் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி ஆதரவாளர்களும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
சமூக வலைத்தளங்களில் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தொண்டமான் குடும்பம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷம் மேலோங்கியது.
இந்நிலையில் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக ஏசியன் மிரருக்குத் தெரிய வந்துள்ளது.