அரசாங்கம் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக ஒரு தேசிய நலனாக இணைந்து செயல்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கொடுத்துள்ள இந்த அழைப்பிற்கு எதிர்க் கட்சிகளிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாநாட்டில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மத்திய வங்கி ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் நடத்தப்பட்ட இறுதி அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இருவரும் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளனர்.
இதற்கான கடிதங்களை பிரதமர் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.
"பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு கையளித்துள்ளனர்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கோபத்திற்கு மத்தியில் புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக சம்மதித்துள்ளனர்.
இதன்படி தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகும் பொதுக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளதுடன், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றிரவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நுகேகொடையில் பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மஹரகம மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இன்று மாலை இலங்கையின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தற்போதைய அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை தெரிவு செய்ய கடுமையாக உழைத்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு குருநாகல் மற்றும் கட்டுநாயக்க, ஆகிய பகுதிகளில் இருந்து பயணித்த மக்களும் அப்பகுதியில் வாகன நெரிசலைக் குறைத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தனர்.
மஹரகம மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எரிபொருள் விலை அதிகரிப்பு, மருந்து தட்டுப்பாடு, எரிவாயு நெருக்கடி, பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு போன்றவற்றுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அம்பாறை விவசாயிகள் உகனவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உஹன குமரிகம, மல்வத்த திஸ்ஸபுர, சந்தனதபுர, சியம்பலாவெவ, மாயதுன்ன ததயம்தலாவ மற்றும் ஏனைய விவசாயக் குடியேற்றங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மின்வெட்டால் கடைகள், சிறுதொழில்கள், போக்குவரத்து சேவைகள், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தை தேசிய மக்கள் படை ஏற்பாடு செய்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக எல்பிட்டிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. தற்போதைய சூழ்நிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் குழு ஒன்று கூடியுள்ளதாகவும் அந்த இளைஞர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் போராட்டத்தை ஏற்பாடு செய்த இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.
தனது அமைச்சுப்பதவியிலிருந்து நாமல் ராஜபக்ச விலகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றிரவு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியிலேயே, நாமல் ராஜபக்ஸ தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரியவருகிறது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது பெற்றோர் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
லிமினி ராஜபக்சவும் அவரது பெற்றோரும் நாட்டை விட்டு தெரியாத இடத்திற்கு சென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்ற இரு மருமகளும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த சமூக ஊடகங்களுக்கான தடை சற்று நேரத்திற்கு முன்னர் நீக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களை அரசாங்கம் முடக்கியதால் அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சர்வதேச அளவிலும் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டன.
சமூக வலைத்தளங்களை தடை செய்தமை மனித உரிமைகள் மீறல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்து இருந்தது.
நிலையில் சமூக வலைத்தளங்களுக்கான தடையை அரசாங்கம் சற்று முன்னர் நீக்கியுள்ளது.
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை கூடியபோது இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி தீர்மானத்தை நிராகரித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் கூறியதாவது:
துணை சபாநாயகரின் முடிவை ஒவ்வொரு பாகிஸ்தானும் வரவேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வெளிநாட்டு சதியாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே.பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
பாகிஸ்தானை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும், இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் பரூக் ஹபீப் தெரிவித்துள்ளார்.