இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓஷத சேனாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் அவரது இராஜனாமாவிற்கான காரணம் வெளியாகவில்லை. அதேசமயம் நேற்றிரவு முதல் நாட்டில் சமுக்க ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நிலைமை குறித்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு சபையை கூட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மிரிஹான பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முழுமையான அறிக்கையை பாதுகாப்புப் படையினரிடம் சமர்ப்பித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே, நாட்டின் நிலைமை குறித்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு சபையை கூட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகநூல் மூலம் மிரிஹானவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், துனிசியா, ருமேனியா மற்றும் தாய்லாந்தில் நடந்த போராட்டங்கள் போல சில இடங்களில் இருந்தமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள் நேற்று நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வட்ஸ்அப், டுவிட்டர் போன்றவற்றை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு பூராகவும் இன்று பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் இந்த முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் அவர் இன்னும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனால் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நிதியமைச்சர் ஏப்ரல் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்வதற்கு முன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது அவர் சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தமது கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆதரவாளர்களை எதிர்கொள்ள முடியாமல் கிராமத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களால் தாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், புத்தாண்டு காலத்தில் வெளிநாடுகளில் உள்ள தமது பிள்ளைகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களை சந்திக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் தற்போது வெளிநாடு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது வெளிநாடு சென்றால், அவர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விளம்பரப்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும்.
அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது கொழும்பில் உள்ள தமது தனிப்பட்ட இல்லங்கள் அல்லது உத்தியோகபூர்வ இல்லங்கள் இருந்து வருத்தமடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர்.
இன்று இடம்பெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கும் பாரிய நடவடிக்கைகள் இடம்பெறலாம் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கம் நேற்றுமாலை தீடிரென 36 மணித்தியால ஊரடங்கை அறிவித்தது, அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு சில மணிநேரங்களின் பின்னர் நேற்று மாலை ஆறு மணிமுதல் நாளை காலை ஆறு மணிமுதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் பாரிய விலை அதிகரிப்பு சமையல் எரிவாயு எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு பல மணிநேர மின்துண்டிப்பு உட்பட பல விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதே இந்த ஊரடங்கின் நோக்கம்.
ஜனாதிபதியின் உத்தரவின் பின்னர் இராணுவத்தினரை அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக ஆரம்பமான போதிலும் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் படையினர் பொலிஸாருக்கும் இடையிலான மோதலுடன் முடிவடைந்தது.
முப்படையினரும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்,பொலிஸாரை போல கைதுகளை மேற்கொள்ளமுடியும் என சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தெரிவித்தார்.
இதேவேளை சட்ட ஒழுங்கிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலைமையை கையாள்வதற்கு பத்தாயிரம் பொலிஸார் தயாராக உள்ளனர் என தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அமைச்சர்கள் அரசாங்க அரசியல்வாதிகள் உட்பட முக்கிய பிரமுகர்களின் வீடுகளிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளாவிய ரீதியில் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
ஊரடங்கின் மத்தியில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவை எனஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரிலும் ஏனைய முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்வதற்காக படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,
இதேவேளை 36 மணிநேர ஊரடங்கு உத்தரவு குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
மக்கள் பட்டினி கிடப்பதன் காரணமாகவே வீதியில் இறங்குகின்றனர்,மின்வெட்டு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்மை காரணமாக அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்,தங்கள் குரல்களை எழுப்பும் மக்களிற்கான அரசாங்கத்தின் பதில் அவசரகாலநிலையை அறிவிப்பதும் ஊரடங்கை பிறப்பிப்பதுமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கோரிக்கைக்கு அமைய சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் முகப்புத்தகம், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) இரவு நுகேகொட மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் விரைவில் எடுக்கப்பட வேண்டிய விசேட தீர்மானம் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.