web log free
May 26, 2022
kumar

kumar

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளனர்.

மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற கோட்டா கோ கம மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற மைனா கோ கம ஆகிய அமைதி ஆர்ப்பாட்டங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (25) மாலை வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அதில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் இதனுடன் சம்பந்தப்பட்ட விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அவர் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றுவார்.

ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் புதிய தளபதியாக விகும லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மே 9 ம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை வந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

யோசித ராஜபக்ச நிதீசஜயசேகர இருவரும் இரவு வர்த்தகரீதியில் முக்கியமான நபர்களிற்கான பகுதி ஊடாக விமானநிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் கறுப்பு உடையணிந்திருந்தனர் அவர்களை பலர் விமானநிலையத்திற்கு வெளியே சந்தித்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோசித ராஜபக்ச மே 9 ம் திகதி திங்கட்கிழமை காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச்சென்றார் அதன் பின்னர் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது.

பசில் ராஜபக்ச மற்றும் பி.பி.ஜயசுந்தர பதவியில் இருந்து நீக்கப்பட்டமையே இன்று இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளக் கணக்கில் பதிவிட்டுள்ளதாவது, 

2015 இல் மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தமையே இன்றைய அனைத்து நெருக்கடிகளுக்கும் ஆணிவேர் என்றே கூற வேண்டும். பின்னர் நல்லாட்சி நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது. பின்னர் கோட்டாபாய வந்தார். அதனுடன் நோய் வந்தது. நாடு அந்நிய செலாவணியை இழந்தது. 2015 தோல்வி இந்த பின்னடைவுகள் அனைத்திற்கும் மையமானது.

இந்த அரசாங்கம் இரண்டு பெரிய தவறுகளை செய்துள்ளது. பி.பி.ஜெயசுந்தரவின் நீக்கம். பசில் ராஜபக்சவின் நீக்கம். இலங்கையின் பொருளாதார இலக்கை 22 பில்லியன் டொலரில் இருந்து 80 பில்லியன் டொலர்களாகக் கொண்டு வந்த இந்த இருவரை விடவும் இலங்கையின் பொருளாதார இலக்கை புரிந்து கொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்களை ஒழிப்பது நெருக்கடிக்கு மத்தியில் எங்களை தனிமைப்படுத்தியது என்று கூறியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமிற்கும் மற்றுமொருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி இன்று உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும் தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வௌிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளார்.

அத்துடன், மாதாந்தம் முதலாவது ஞாயிறுக்கிழமை சந்தேகநபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் சுமார் 3 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் உடல்நிலை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு நீதிபதி பிணை வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பங்கரவாத தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளான மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தையே பிரபல வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் என்பவர்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் அறிந்தும், அதனை பொலிஸாருக்கு தெரிவிக்காது மறைத்த குற்றச்சாட்டில் பிரபல வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை நிறைவடைந்ததன் பின்னர் 40 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பெரும்பான்மையான அரச அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். 10 கட்சிகள் கொண்ட குழு மற்றும் பொதுஜன பெரமுன சாராத பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்களுக்கும், சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் பலருக்கும் அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அரச அமைச்சுக்களுக்கான செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு அமைச்சின் உள்ளடங்கல்களையும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் மீண்டும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

விலை உயர்வு இறுதி செய்யப்பட்டால், 12.5 கிலோ எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.5,000 என்ற வரம்பை மீறும் என அரசாங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அந்த அளவிலான கேஸ் சிலிண்டர் ரூ.4860க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வினால் தற்போதைய விலையில் எரிவாயுவை விற்பனை செய்ய முடியாது எனவும்  விட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாக்குமூலமொன்றிற்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரன்மாண்டுவை கைது செய்யுமாறு கோரி சிஐடிக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிராயுதபாணியான போராட்டக்காரர்களை அலரிமாளிகையில் தாக்குதல் நடத்த தூண்டியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் தற்போதுள்ள அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என பிரதமரால் நியமிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான கண்டறியும் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தக் குழு கூடிய போதே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் மாதாந்த அரிசி தேவை 200,000 மெற்றிக் தொன் எனவும், தற்போதைய அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதிக்குள் தீர்ந்துவிடும் எனவும் குழு தெரிவித்துள்ளது. 

Page 1 of 91